வாஷிங்டன்:அமெரிக்காவில், 'ஆப்பிள் ஐபாட்' வாயிலாக, 'ஆன்லைன் கேம்' விளையாடிய, 6 வயது சிறுவன், 11 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளான்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெசிகா ஜான்சன். கொரோனா பரவல் காரணமாக, வீட்டில் இருந்தபடி, அலுவலக பணிகளை செய்து வந்தார்.இவரது மகன் ஜார்ஜ் ஜான்சன், 6. 'ஆன்லைன் வகுப்புகளுக்காக, ஜெசிக்காவின், 'ஆப்பிள் ஐபாட்' உபகரணத்தை பயன்படுத்தி வந்தான். ஜெசிகா அலுவலக பணிகளை கவனிக்கும் போது, 'சோனிக் போர்சஸ்' என்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்தான்.
இந்நிலையில், ஜெசிகாவின் வங்கி கணக்கில் இருந்து, 'ஆப்பிள்' மற்றும், 'பேபால்' நிறுவன கணக்குகளுக்கு, கடந்த ஜூலையில், 2 லட்சம் ரூபாய் பணம் சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.வங்கி கணக்கில் மோசடி நடந்துள்ளதாக நினைத்து, வங்கியில் புகார் தெரிவித்தார். வங்கியும் விசாரணையை துவக்கியது. ஜூலை இறுதிக்குள், ஜெசிகாவின் கணக்கில் இருந்து, ஆப்பிள் நிறுவன கணக்குக்கு, 11 லட்சம் ரூபாய் சென்றுள்ளதை அறிந்து, அவருக்கு மயக்கமே வந்துவிட்டது.
இது தொடர்பாக வங்கி நடத்திய விசாரணையில், ஜெசிகாவின் மகன் ஜார்ஜ், 'சோனிக் போர்சஸ்' விளையாட்டில், புதிய கதாபாத்திரங்கள் வாங்கவும், போனஸ் பாயின்ட்கள் பெறவும், தாயின் கணக்கில் இருந்து பணத்தை செலவழித்தது தெரியவந்தது.
இது தொடர்பாக, ஆப்பிள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, நடந்த தவறை கூறி, பணத்தை திருப்பி அளிக்கும்படி, ஜெசிகா தரப்பில் கோரப்பட்டது.'ஆனால், 60 நாட்களுக்குள் கோரிக்கை வைத்தால் மட்டுமே பணம் திருப்பி தரப்படும்' என, ஆப்பிள் நிறுவனம், அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE