சென்னை:'கட்சியினர் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்' என, முதல்வரும், துணை முதல்வரும் உத்தரவிட்டு உள்ளனர்.
அ.தி.மு.க., அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டம், கட்சி தலைமை அலுவலகத்தில், நடந்தது.கூட்டத்தில் பங்கேற்ற, மாவட்ட செயலர்களை, தனித்தனியே கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., - துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் அழைத்து பேசினர்.
அப்போது, சட்டசபை தொகுதிகளில், எத்தனை ஓட்டுச் சாவடிகள் உள்ளன; அவற்றில் எத்தனை ஓட்டுச்சாவடிகளில் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; எத்தனை ஓட்டுச்சாவடிகளில், முகவர்கள் நியமிக்கப்படவில்லை என்ற, விபரங்களை கேட்டுள்ளனர்.ஓட்டுச்சாவடி முகவர் களாக, உங்கள் உறவினர்கள்,தெரிந்தவர்கள் என்று நியமிக்காமல், கட்சிக்காக உழைப்பவர்களை நியமிக்க வேண்டும்.ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் குறைந்தது, 75 பேரை நியமிக்க வேண்டும். அதில், 25 பேர் பெண்கள் இருக்க வேண்டும் என, உத்தரவிட்டுஉள்ளனர்.
இதுவரை அதிக ஓட்டுச்சாவடிகளுக்கு முகவர்கள் நியமிக்காமல் உள்ள, மாவட்ட செயலர்களை கண்டித்துள்ளனர்.விரைவாக முகவர்களை நியமித்து, அவர்களின் பெயர், முகவரி, மொபைல் போன் எண் போன்ற விபரங்களை, கட்சி தலைமையிடம் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். மேலும், மாவட்ட செயலர்கள் மீது, கட்சி நிர்வாகிகள் அளித்த புகார் குறித்தும், சம்பந்தப்பட்டவர் களிடம் விசாரித்துள்ளனர்.
கட்சியினர் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என, சிலருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். சிலரின் நடவடிக்கைகள் சரியில்லை; திருத்தி கொள்ளாவிட்டால், பதவி இழக்க நேரிடும் என, எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர்.
மாவட்ட செயலர்கள், மண்டல பொறுப்பாளர்கள், பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவர் என்று நினைத்து, கூட்டத்திற்கு வந்தனர்.அதற்கான அறிவிப்பை, தலைமை வெளியிடவில்லை. அதேநேரம் கட்சி நடவடிக்கை குறித்து விசாரித்து, எச்சரித்து அனுப்பியதால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE