சென்னை:சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள், 104 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மேலும், 79 மாணவர்களுக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.
சென்னை, கிண்டியில், ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், இம்மாதம், 1ம் தேதி முதல், இந்த நிறுவனம் செயல்பட துவங்கியது. இந்நிலையில், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு, அடுத்தடுத்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் வரை, மாணவர்கள், பணியாளர்கள் என, 104 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
பரிசோதனைகளின் முடிவில், மேலும், 79 மாணவர்களுக்கு தொற்று பாதித்திருப்பது உறுதியானது. இதன் வாயிலாக, சென்னை ஐ.ஐ.டி.,யில், கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை, 183 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும், சென்னை கிண்டி கிங்ஸ் ஆய்வக வளாகத்தில் உள்ள, அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், பல மாணவர்களின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:சென்னை ஐ.ஐ.டி.,யில் உணவக பணியாளர் வாயிலாக, தொற்று பரவியிருக்கலாம் என, கருதுகிறோம். தொற்று பரவ காரணமாக இருந்த உணவகம் மூடப்பட்டுள்ளது. விடுதி மாணவர்களுக்கு பார்சல் வாயிலாக உணவு வழங்கப்படுகிறது. துறைகள், ஆய்வு மையங்கள், நுாலகங்கள் மூடப்பட்டுள்ளன. பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும்படி, ஐ.ஐ.டி., நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். அங்குள்ள அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE