சென்னை:தேசிய அளவில் நடக்கும், ஐ.ஐ.டி., போட்டி தேர்வு தொடர்பாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித் துறைக்கும், தனியார் நிறுவனத்திற்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் ௨ படிக்கும் மாணவர்கள், ஜே.இ.இ., போட்டி தேர்வுகளில் பங்கேற்று, இந்திய தொழில்நுட்ப கழக நிறுவனங்களில் சேர, டில்லியை சேர்ந்த, 'நெக்ஸ்ட்ஜென் வித்யா' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை, தலைமை செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்நிறுவனம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியரை, தொழில்நுட்பக் கல்வி சார்ந்த, உயர் கல்விக்கான போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், இணையதளம் வழியே, பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.
கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில், பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி, முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், தங்கள் சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்கும் மாணவ - மாணவியருக்கு தனித்தனியே, 'லாகின் ஐ.டி., பாஸ்வேர்டு' வழங்கப்படும்.
பள்ளி ஆசிரியர், பயிற்சி ஒருங்கிணைப்பாளர், தலைமை ஆசிரியர் ஆகியோர், மாணவர்கள் பயிற்சி பெறுவதை கண்காணிக்க, 'லாகின் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு' வழங்கப்படும். இப்பயிற்சிக்கான பதிவு, வரும், 21 முதல், 31 வரை நடக்கும். ஜன., 4 முதல், பயிற்சி வகுப்புகள் துவங்கும்.பயிற்சிக்கான பதிவு மற்றும் இணையதள முகவரி, play.google.com/store/apps/details?id=com.vidhyaeduation.android.
இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை செயலர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், நெக்ஸ்ட்ஜென் வித்யா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கவுரவ் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE