சென்னை:செட்டிநாடு குழுமத்தில் நடந்த சோதனையில், 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கணக்கில் காட்டப்படாத ரொக்கம், 23 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும், வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
சென்னையை தலைமை இடமாக வைத்து செயல்படும் நிறுவனம், செட்டிநாடு குழுமம். பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, இந்த குழுமத்தை துவக்கினார். சோதனைஇந்த குழுமத்தின் கீழ், சிமென்ட் தயாரிப்பு, மருத்துவமனை, கல்வி, நிலக்கரி சுரங்கம், சரக்கு போக்குவரத்து, கட்டுமானம் என, பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த குழுமம், வருவாய்க்கு ஏற்ப முறையாக வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்வதாக, வருமான வரித் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை உட்பட, 60 இடங்களில், டிச., 9 முதல், ஐந்து நாட்கள், வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து, மத்திய நேரடி வரி வாரியத்தின், வருமான வரி கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னையில் இருந்து செயல்படும், முன்னணி வர்த்தக நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக, வருமான வரி புலனாய்வு பிரிவு தகவல் அளித்தது. அதன்படி., டிசம்பர், 9ம் தேதி, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான, சென்னை, திருச்சி, கோவை மற்றும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா உட்பட, 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.இதில், சரக்கு போக்குவரத்து, சிமென்ட் உற்பத்தி, கட்டுமான நிறுவனம் உட்பட, பல்வேறு நிறுவனங்கள் அடங்கும்.
சோதனையிலேயே மிகச் சிறப்பு என்னவெனில், கணக்கில் காட்டாத, 23 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது தான்.விசாரணைமேலும், வருமான வரி கணக்கு தாக்கலில் காட்டாமல், வெளிநாட்டு நிறுவனத்தில், 110 கோடி ரூபாய் வரை, 'பிக்ஸட் டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை, கறுப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் வரும்.
இது தவிர, செலவை அதிகரித்து, லாபத்தை குறைத்து, கணக்கை முழுமையாக காண்பிக்காமல், போலியாக இழப்பீடு கோரிய வகையில், 435 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், மருத்துவ முதுநிலை சேர்க்கைக்கு, நன்கொடை வசூலித்ததும் அடங்கும்.மேலும், சோதனை நடந்த குழுமத்திற்கும், மற்றொரு குழுமத்திற்கும் இடையே, பல்வேறு துறைமுகங்களில், மூன்று உள்கட்டமைப்பு வசதிகள் விற்பனை ஒப்பந்தம் நடந்துள்ளது.
இதன் வாயிலாக, மூலதன ஆதாயமாக, 280 கோடி ரூபாய் குறைத்து காண்பிக்கப்பட்டதும் தெரியவந்தது.மேலும், ஏராளமான வங்கிகளில், 'லாக்கர்'கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது; அவை விரைவில் சோதனைக்கு உட்படுத்தப்படும். தற்காலிகமாக நிறைவு அடைந்து உள்ள இந்த சோதனையில், இந்தக் குழுமம், 700 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE