சென்னை:தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நேற்று நிறைவடைந்தது. பெயர் சேர்க்கக் கோரி, 20.62 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவ., 16ம் தேதி துவங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது. நான்கு நாட்கள், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
கணிசமாக உயரும்
மற்ற நாட்களில், தேர்தல் அலுவலர் அலுவலகங்களில், விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நேற்று முன்தினம் வரை, மாநிலம் முழுதும், பெயர் சேர்க்கக் கோரி, 20.62 லட்சம் பேர்; பெயர் நீக்கக் கோரி, 3.99 லட்சம்; திருத்தம் கோரி, 3.27 லட்சம்; தொகுதிக்குள் முகவரி மாற்றம் கோரி, 1.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த மாதம், 16ம் தேதி வெளியிடப்பட்ட, வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 3.01 கோடி ஆண்கள்; 3.09 கோடி பெண்கள், 6,385 இதர பாலினத்தவர்கள் என, மொத்தம், 6.10 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.தற்போது, புதிதாக பெயர் சேர்க்கக் கோரி, 20.62 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், வாக்காளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும். விண்ணப்பங்களை ஆய்வு செய்து, அடுத்த மாதம், 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல், வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு, மொத்தம், 29.72 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. அவற்றை பரிசீலனை செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஆலோசனைவெளிநாடுகளில் வசிக்கும், 200 பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
காலியாக உள்ள, கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடத்துவது குறித்து, இந்திய தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்யும். தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நிலவரத்தை, தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு வசதியாக, ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, சாஹு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE