புதுடில்லி : மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதிய கடைசி புத்தகம், அவரது மகன் மற்றும் மகளுக்கு இடையே மோதலை உருவாக்கியுள்ளது.
பிரணாப் எழுதியுள்ள, 'பிரசிடென்ஷியல் இயர்ஸ்' என்ற புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது. இதில், காங்., தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் குறித்து, பிரணாப் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பிரணாப் மகனும், எம்.பி.,யுமான அபிஜித் முகர்ஜி, புத்தகத்தில் திட்டமிட்டு சில சர்ச்சை கருத்துக்கள் பதிவானதாக கருதுவதால், மகன் என்ற முறையில், நுால் வெளியீட்டை நிறுத்தும்படி, பதிப்பகத்தாரை வலியுறுத்தினார். இதைக் கண்டித்து, பிரணாப் மகள், ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியிருப்பதாவது:அபிஜித், நம் தந்தை இறுதியாக எழுதிய புத்தகத்திற்கு தேவையற்ற இடையூறு ஏற்படுத்த வேண்டாம்.பிரணாப் மகள் என்ற முறையில், இதை கூறுகிறேன். அவர், நோய்வாய்ப் படுவதற்கு முன்பே, நுாலை எழுதி முடித்து விட்டார். அதில் இடைச் செருகல் ஏதும் கிடையாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
பிரணாபின் இறுதிக் காலம் வரை உடனிருந்தவர், ஷர்மிஸ்தா முகர்ஜி. அபிஜித்திற்கும், பிரணாபிற்கும் அவ்வளவாக சுமுக உறவு கிடையாது என்பதை நெருக்கமானோர் அறிவர்.
ஆனாலும், பிரணாபின் சொந்த தொகுதியான, மேற்கு வங்கம், ஜங்கிபூர் லோக்சபா தேர்தலில், காங்., சார்பில், அபிஜித் முகர்ஜி தான் நிறுத்தப்பட்டார். பிரணாப் உயிருடன் இருந்தவரை, தன் குடும்ப விவகாரம் வெளியில் வராமல் பார்த்துக் கொண்டார். அவர் மறைந்த பின், அதிகாரமிக்க அரசியல் வாரிசு யார் என்பதில், மகனுக்கும், மகளுக்கும் இடையிலான மோதல் பகிரங்கமாக வெடிக்கத் துவங்கியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE