கோவை;அசந்து துாங்கிக்கொண்டிருக்கும்போது, 'கரகர' வென மரம் அறுக்கும் சத்தம் எழும்பினால் எப்படியிருக்கும்? மண்டையை துளைக்கும் இந்த சித்திரவதையைதான், ராம்லட்சுமி நகர் மக்கள் பல ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
கோவை தடாகம் ரோடு இடையர்பாளையம் பிரிவில் இருந்து, கவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ளது, ராம்லட்சுமிநகர் விரிவாக்கம். இங்கு, 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு ரோடு பிரச்னை, துப்புரவு மற்றும் சுகாதார பிரச்னை என, பல பிரச்னைகள் உள்ளபோதும், வீடுகளின் மத்தியில் உள்ள மரம் அறுக்கும் ஆலையும், ஹாலோபிளாக் தயாரிக்கும் யூனிட்டும்தான், இவர்களின் தலையாய பிரச்னை.இங்குள்ள மரம் அறுக்கும் ஆலை, இரவு பகலாக இயங்கி வருகிறது.
மரம் அறுக்கும் சத்தமும், அதில் இருந்து வெளியேறும் துாசியும், இங்கு வசிப்பவர்களை நிம்மதி இழக்க செய்து வருகிறது.குடியிருப்பு முழுவதும், துாசி படலம் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளின் கதவுகளும், ஜன்னல்களும் மூடியே வைக்கப்பட்டுள்ளன. முதியவர்கள் அனைவரும், துாசி மாசு காரணமாக, சுவாசப்பிரச்னையால் அவஸ்தைப்படுகின்றனர்.ஹாலோ பிளாக் தயாரிக்கும் மெஷின், மண்டையை பிளக்கும் அளவுக்கு ஒலி எழுப்புகிறது. காலை, 5:00 மணியில் இருந்து இரவு, 7:00 மணி இந்த கொடுமைதான் நடக்கிறது. வயோதிகர்கள் பலர் இரவெல்லாம் துாக்கமில்லாமல் தவிப்பார்கள்.
அதிகாலையில்தான் சிறிது அயர்ந்து உறங்குவார்கள். அதிகாலையில் மண்டையை நோண்டுவது போன்ற சத்தம் வந்தால், எப்படி உறங்க முடியும்?எங்களுக்கு தெரியாதுப்பா!இது குறித்து, மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போது, 'இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. நகராட்சி அதிகாரிகள்தான் ஆலைக்கு அனுமதி அளித்துள்ளனர். அதனால் அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.
மாசுப்பிரச்னைக்கு எந்த துறையிடம் முறையிடுவது என, மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெளிவுபடுத்தினால் தேவலை!இது சம்பந்தமாக, கோவை மாநகராட்சி கமிஷனருக்கு பல முறை புகார் மனு அனுப்பியும், கண்டுகொள்ளவே இல்லை என்கிறனர் இப்பகுதி மக்கள்.போலீசு... இவங்களுக்கு துாசு!மரம் அறுக்கும் ஆலைக்கு அருகில் வசிக்கும் பழனிசாமி கூறியதாவது:பல ஆண்டுகளாக இந்த துன்பத்தை அனுபவித்து வருகிறோம். ஆரம்பத்தில் இங்கு மரக்கடை மட்டும் தான் இருந்தது. அதனால் பிரச்னை இல்லை.
கடந்த சில ஆண்டுகளாகதான், இயந்திரம் வைத்து மரங்களை அறுக்கின்றனர்.அதனால்தான் அதிக சத்தமும், துாசியும் வருகிறது. போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்த போது, ஆலை உரிமையாளரை அழைத்து, காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை மட்டும்தான் இயங்க வேண்டும் என, அறிவுறுத்தினர். ஒரு வாரம் மட்டும் அவர்கள் சொன்னதை பின்பற்றினர். பிறகு பழையபடி இரவு, பகலாக இயங்க துவங்கி விட்டன,'' என்றார்.
மக்களை காக்கணும்
மாநகராட்சி!குடியிருப்பு பகுதிக்குள் ஒலி மற்றும் துாசி மாசு ஏற்படுத்தும், இந்த மரம் அறுக்கும் ஆலையையும், ஹாலோ பிளாக் யூனிட்டையும், வேறு இடத்துக்கு மாற்றி, இங்கும் வசிக்கும், 50 குடும்பங்களையும் பாதுகாக்கவேண்டியது, மாநகராட்சி நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பு.மாநகராட்சி கமிஷனராக ஷ்ரவன்குமார் பதவி வகித்தபோது, இப்பகுதி மக்கள் புகார் அளித்திருக்கக்கூடும். தினமும் கள ஆய்வு செய்து, மக்கள் பிரச்னைகளை தீர்த்து வரும் புதிய கமிஷனர், இப்பிரச்னையில் வேடிக்கை பார்க்க மாட்டார் என்று நம்புவோம்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE