சிவகாசி:'நாங்கள் நிறைய வர்ம குத்து வைத்துள்ளோம், எங்கே குத்த வேண்டும் என எங்களுக்கு தெரியும்,''என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசினார்.
சிவகாசியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:கூவத்துாரில் ஆரம்பித்த கூத்தினால் இன்று ஊரே கூவமாக மாறிவிட்டது. கேட்டால் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்கின்றனர். பீகார் உள்ளிட்ட மாநிலங்களோடு ஒப்பிட்டால் உண்மைதான். ஆனால் உலகத்திலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை கொண்டு வர வேண்டும். ஈயத்தை பார்த்து பித்தளை சிரித்தது போல இருக்கிறது.
நான் சிறு வயதிலிருந்து பார்க்கிறேன் கூவம் மாறவில்லை. நமது பணத்திலிருந்து பல கோடிகள் செலவழித்தும் வீண். தலைநகரையே சுத்தமாக வைத்திருக்க முடியாதவர்கள் மற்ற இடங்களை எப்படி சுத்தமாக வைத்திருப்பார்கள்.ஜாதியால் மனிதர்களை நொறுக்க நினைப்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். எங்களுக்கு என தனி அடையாளம் உண்டு. தன்மானம் உண்டு. அதை ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டோம்.
தொழில் முனைவோருக்கு உதவி
மருதுபாண்டியர்கள் சண்டைக்கு ஓடும்போது முள் குத்தினால் நின்று எடுக்க மாட்டார்கள். ஓடிக் கொண்டே வாளால் தட்டி விடுவார்கள். அதேபோல் நாங்களும் பின் வாங்க மாட்டோம். தொழிலாளர்களுக்கு சாதகமாக அரசு இருக்க வேண்டும். அரசாங்கத்தின் எந்த உதவியும் இல்லாமல் தொழிலில் முன்னேறி பெருமை சேர்த்தவர்கள் இந்த ஊர்க்காரர்கள். மேலும் உலகளவில் முன்னேறியவர்கள். சிறு குறு வியாபாரிகளை மிகுந்த கவனத்துடன் போற்ற வேண்டும் என்பதே எனதே கொள்கை. அதற்காக பெரிய முதலாளிகள் மீது வெறுப்பில்லை.
50 மல்டி கம்பெனிகள் இருந்தாலும், 5 லட்சம் சிறு தொழில்கள் இருக்க வேண்டும். பல சிறு வியாபாரிகளுக்கு தொழில் முனைவோர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்வோம். அதை நடைமுறைப்படுத்த திட்டங்கள் தீட்டி வருகிறோம். நேர்மையான ஆட்கள் கிடைப்பது கஷ்டம்.நான் ஓட்டுதான் கேட்கிறேன். எம்.ஜி.ஆர்., தி.மு.க., வில் இருந்த போதும் மக்கள் திலகம் தான். அ.தி.மு.க., வில் இருந்த போதும் மக்கம் திலகம்தான். யாரும் அவரை கட்சிக்காரர் என கூறியதில்லை.
இப்பொழுது அமைச்சர்களாக இருக்கும் பல பேர் அவரை பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நான் அவர் மடியில் அமர்ந்திருக்கிறேன். என்னை உச்சி முகர்ந்து பாராட்டியவர் எம்.ஜி.ஆர்.
ஓட்டுக்கு ரூ. 5 லட்சம்
நீர் நிலைகள் எல்லாம் ரியல் எஸ்டேட்டில் போய்விட்டது. எல்லாவற்றையும் விற்று விட்டார்கள். நம்ம பணம் என்பதால் ஒரு ஓட்டிற்கு ரூ. 5 லட்சம் வாங்க வேண்டும். ஆனால் நான் தம்புடி கொடுக்க மாட்டேன். தேர்தலில் வெற்றி பெற்று வந்தால் கஜானா காலியாக இருக்கும். நல்ல தமிழகத்தை உருவாக்க லஞ்சம் வாங்காமல் இருந்தாலே போதும். உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் இருந்தால் வெற்றிகரமாக நடத்த முடியும்.
நாங்கள் நிறைய வர்ம குத்து வைத்துள்ளோம்.எங்கே குத்த வேண்டும் என தெரியும். சினிமாக் காரரை பார்க்க கூட்டம் வருகிறது. இது ஓட்டாக மாறாது என சிலர் கூறுகின்றனர். எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். திறமையாளர்களாக வந்துள்ளோம். நேர்மையாக வந்துள்ளோம். நேர்மை என கூறி எங்களிடம் மல்லு கட்டுங்கள்.பத்து பேர் ஒன்று சேர்ந்தால் ரவுடிகள் ஓடி விடுவார்கள். அடுக்களையிலிருந்தும் தாய்மார்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.
தொழில் முனைவோர்ர்களுக்காக ஒரு நல்ல அரசு அமைய வாய்ப்பிருக்கிறது. அதை பயன்படுத்தி கொள்ளுங்கள். நான் நிச்சயமாக செய்வேன். ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் ரோட்டில் நான் அங்கபிரதட்சனம் செய்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE