துாத்துக்குடி:''ஈகோவை விட்டுக் கொடுத்து, ரஜினியுடன் கூட்டணி சேர தயார்,'' என, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்தார்.
வேட்பாளர் பட்டியல்
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அவர் கூறியதாவது: எங்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி தந்து, பின்னர் மறுக்கின்றனர். வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம். ரஜினி கட்சியின் கொள்கை என்ன என தெரியட்டும். ஒற்றை வார்த்தையில் சொல்வதை, முழு கொள்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது.எங்களிடையே நட்பு உள்ளது.
எந்த ஈகோவையும் விட்டுக் கொடுத்து, ரஜினியுடன் கூட்டணி அமைப்பேன். துணைவேந்தர் சுரப்பாவை துரத்தி துரத்தி அடிக்கின்றனர். தமிழகத்தின் ஊழல் பண்ணையார்களை துரத்தி அடிக்க, எங்களுக்கு ஓட்டு போடுங்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.
முன்னதாக, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கமல் பேசியதாவது: பட்டாசால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்பது உண்மை தான். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பல தொழிற்சாலைகள் உள்ளன. அங்கெல்லாம் கையூட்டு வாங்கி, விதிகளை மீறுகின்றனர்.
ஒருநாள் வெடிக்கும் பட்டாசால் மாசுபட்டு விடுமா?இதற்கு மாற்று திட்டம் கொண்டு வர வேண்டும். பட்டாசு தொழிலாளர் பிரச்னையை நிச்சயமாக தீர்த்து வைப்பேன். கூவத்துாரில் ஆரம்பித்த கூத்தால், இன்று ஊரே கூவமாக மாறிவிட்டது. கேட்டால் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்கின்றனர்.பீஹார் உள்ளிட்ட மாநிலங்களோடு ஒப்பிட்டால் உண்மை தான். உலகத்திலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை கொண்டு வர வேண்டும்.
ரூ.5 லட்சம்
நீர் நிலைகள் எல்லாம் ரியல் எஸ்டேட்டில் போய்விட்டன. எல்லாவற்றையும் விற்று விட்டனர். அனைத்தும் நம் பணம் என்பதால், ஒரு ஓட்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வாங்க வேண்டும். நாங்கள் நிறைய வர்ம குத்து வைத்துள்ளோம். எங்கே குத்த வேண்டும் என தெரியும். சினிமாக்காரரை பார்க்க கூட்டம் வருகிறது.இது ஓட்டாக மாறாது என, சிலர் கூறுகின்றனர். நான் நிச்சயமாக ஆட்சி செய்வேன். ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், ரோட்டில் அங்கபிரதட்சனம் செய்கிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.
பாரதியார் வீட்டில் கமல்
எட்டையபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டிற்கு கமல் சென்றார். அந்த வீடு நினைவு இல்லமாக
பராமரிக்கப்படுகிறது.வீட்டை சுற்றிப்பார்த்த கமல், பாரதி சிலையுடன் புகைப்படம்
எடுத்துக்கொண்டார்.
பார்வையாளர் வருகை பதிவேட்டில் அய்யன் என் கவிதைக்கு.. அப்பன் பிறந்த வீடு.. அய்யா பாரதி என் அறிவு பிறந்த வீடு. அன்பன் கமலஹாசன் 2020' என எழுதினார்.
தொடர்ந்து துாத்துக்குடி சென்றார். அங்கு மழை பெய்தது. அவர் பேசுகையில், அன்புமழையில் நனைந்தபடி வந்தேன். பாரதியார் வாழ்ந்த வீடு மோசமாக உள்ளது. வெற்றி என்பது விலை கொடுத்து வாங்குவது அல்ல... நீங்கள் கொடுப்பது... இனியாவது அதனை மக்கள் தீர்மானியுங்கள். மீனவர் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
ஒரு மீனவர் கூட இனி கடலில் பலியாக நாங்கள் விடமாட்டோம். ஸ்டெர்லைட் துப்பாக்கிசூட்டில் முழுமையாக நீதி கிடைக்க போராடுவோம்.மீனவர் அணி தொடங்க உள்ளோம். காவல்துறையினருக்கு குறித்த நேரம் பணி வழங்கினால் அவர்கள் மனிதர்களாக இருப்பார்கள். அந்த துறை எங்கள் ஆட்சியில் சீரமைக்கப்படும். இவ்வாறு பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE