கொரோனா வைரஸ் தீவிரமாக இருந்த சமயத்தில், குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனரா?
கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும், குழந்தை தொழிலாளர்கள் குறித்து தொடர்ச்சியான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வைரஸ் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இருந்ததால், குழந்தைகளை, பெற்றோர் பணியிடங்களுக்கு அனுப்பவில்லை. இதனால், முற்றிலும் குழந்தை தொழிலாளர் இல்லாத சூழல் உள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, குடும்ப வறுமையை சமாளிக்க, குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வாய்ப்புள்ளது. இதை தடுக்க, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.பெற்றோர்களே குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது ஏன்?
வேறு என்ன...வறுமைதான்! பள்ளிகள் திறக்கப்படும் வரை, குழந்தைகள் ஏதேனும் வேலைக்கு சென்றால், உதவியாக இருக்கும் என, சில பெற்றோர் கருதுகின்றனர். இது, குழந்தைகளுக்கு அவர்கள் செய்யும் மாபெரும் துரோகம். வேலை செய்து, பணம் சம்பாதிக்க பழகி விட்டால், மீண்டும், பள்ளி சென்று படிக்க குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.சிறப்பு பள்ளிகளில் படித்த குழந்தைகளின் நிலை என்ன?
கோவையில் மார்ச் மாதம் வரை, 23 சிறப்பு பள்ளிகளில், 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். ஊரடங்கால், வெளிமாநில தொழிலாளர்களின் பலர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். மீதமிருக்கும் குழந்தைகள், கற்றலை விட்டு விடாமல் இருக்க, களப்பணியாளர்கள் மூலம் தேவையான உதவிகள், ஆலோசனைகள், வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்ட பின், மாணவர்கள் தங்கியுள்ள இடத்திற்கு ஏற்ப, சிறப்பு பள்ளிகள் திறக்கப்படும்.தொழில் நிறுவனங்களில் வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடாது என்ற சட்டம் , முறையாக பின்பற்றப் படுவதில்லையே?
குழந்தை தொழிலாளர் தடுப்பு முறை சட்டத்தின்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என தொழில் நிறுவனங்கள், மக்களிடையே போதிய விழிப்புணர்வு உள்ளது. இதேபோல், 14 முதல் 18 வயது வரையுள்ள வளர் இளம் பருவத்தினரை, ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்துவதும் சட்டத்திற்கு எதிரானது.இது குறித்து, தொழில் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறோம். சட்டத்தை மீறி ஆபத்தான தொழில்களில், வளர் இளம் பருவத்தினரை ஈடுபடுத்துவது தெரிந்தால், அந்நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதில், மக்களின் பங்களிப்பு என்ன?
ஓட்டல், துணிக்கடை, ஒர்க் ஷாப், குறு தொழில் நிறுவனங்கள் என நாம் பார்க்கும் ஏதோ ஒரு இடத்தில், குழந்தைகள் வேலை செய்வதை பார்த்து பரிதாபப்படுவதோடு நின்று விடாமல், எங்களுக்கு 0422 -230 5445 அல்லது 1098 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.மீட்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம்?
மீட்கப்படும் குழந்தைகள், பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை படிக்க, ஊக்கத்தொகையுடன் தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தி தருகிறது. உங்களின் ஒரு போன், அந்த குழந்தையின் வாழ்வையே திருப்பி போட்டு, சிறந்த எதிர்காலம் அமைய உதவும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE