கோவை;அரசுப்பணிக்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை, தனித்தேர்வர்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாநில அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில், தமிழ்வழியில் படித்தோருக்கு, 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேர்வுக்கான அடிப்படை கல்வித்தகுதி முழுக்க, தமிழ்வழியில் படித்தோர், இச்சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு வெளியானதும், சான்றிதழ் பெற, கல்வித்துறையை அணுகுவோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. தனித்தேர்வர்களுக்கு இச்சான்றிதழ் வினியோகிப்பதில், சிக்கல் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.பீளமேடு பகுதியை சேர்ந்த தனித்தேர்வர் ஒருவர் கூறுகையில், 'உடல்நிலை சரியில்லாததால், பத்தாம் வகுப்பு வரை, தனித்தேர்வராக பொதுத்தேர்வு எழுதினேன். பின், பள்ளியில் சேர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வை எதிர்கொண்டேன். நேரடியாக கல்லுாரி சென்று இளங்கலை பட்டம் படித்துள்ளேன். தமிழ்வழி சான்றிதழ் எங்கு பெறுவது என தெரியாமல், குழப்பம் ஏற்பட்டுள்ளது' என்றார்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அந்தந்த பள்ளியை தொடர்பு கொண்டு, முன்னாள் மாணவர்கள் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் பெற்று கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழோ அல்லது மாற்றுச்சான்றிதழோ கொண்டு சென்றால், தலைமையாசிரியர் ஆவணங்களை சரிபார்த்து, இச்சான்றிதழ் வழங்குவார். தனித்தேர்வர்களை பொறுத்தவரை, பிரத்யேக மையங்களில் தான் தேர்வு எழுதுகின்றனர். 'இவர்கள் இயக்குனரகத்தை தொடர்பு கொண்டு தான், சான்றிதழ் பெற முடியும். அந்தந்த மாவட்ட கல்வித்துறையால், இச்சான்றிதழ் வழங்க முடியாது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE