மதுரை:''மறைந்த சட்ட மாமேதை அம்பேத்கருக்கு பா.ஜ., உள்ளிட்டஹிந்துத்துவா அமைப்பினர் மாலையணிவிக்க விட மாட்டோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தேசிய தலைவரான அம்பேத்கரை ஜாதி தலைவராக மாற்ற அக்கட்சி
தலைவர் திருமாவளவன் முயற்சிக்கிறார்,'' என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டினார்.
டிச., 6 அம்பேத்கர் பிறந்த நாளில் சென்னையில் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு மாலை
அணிவிக்க சென்ற ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு
தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் அர்ஜூன் சம்பத்
உள்ளிட்டோர்மாலையணிவித்தனர்.
இதுகுறித்து அர்ஜூன் சம்பத் அளித்த சிறப்பு பேட்டி...
உங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சமீபத்தில் அவரது கட்சியில் இணைந்த யுடியூப் சேனல் நிறுவனர் விக்ரமனும் இனிமேல் ஹிந்துத்துவா சக்திகள் அம்பேத்கர் சிலையை நெருங்க விடமாட்டோம் என மறுபடியும் சவால் விடுவதாக பேசி வருகின்றனர். அம்பேத்கர் என்ன இவர்களது அப்பா வீட்டு சொத்தா. அம்பேத்கர் பொதுவான தேசிய தலைவர்.
அவரது மணி மண்டபம் பொது அரசு இடம். அப்படிப்பட்ட இடத்தில் விடுதலை சிறுத்தைகள்
கட்சியினர் அராஜகம் செய்தனர். கடந்த காலங்களிலும் தற்போதும் பா.ஜ., மற்றும் ஹிந்து
இயக்கங்களை சார்ந்தவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிக்க சென்றால் எதிர்ப்பு கோஷங்களை அவர்கள் எழுப்புவது வழக்கமாக உள்ளது.
அம்பேத்கர் குடியரசு கட்சி தலைவர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அல்ல. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் கொள்கைளை பின்பற்றுபவர்கள் அல்ல. ஈ.வெ.ரா.,
கொள்கையை பின்பற்றுபவர்கள். ஈ.வெ.ரா., கொள்கைக்கும், அம்பேத்கர் கொள்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்
அம்பேத்கர் ஒரு போதும் திராவிட, ஆரிய இன வாதத்தை ஒப்புக்கொண்டதில்லை. ஒரு போதும் பிராமணரின் பூணுால் அறுத்ததோ, குடுமியை எடுத்ததோ, ராமர் படத்தை செருப்பால் அடித்ததோ இல்லை. கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதில்லை. ஆனால் விடுதலை
சிறுத்தைகள் இனவெறுப்பு கொள்கையில் செயல்படுகின்றனர்.
திருமாவளவன் இனி அர்ஜூன் சம்பத்தோ, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரோ அம்பேத்கர் சிலையை நெருங்க விடமாட்டோம் என சவால் விடுத்துள்ளார். அம்பேத்கர் சிலைக்கு
ஹிந்துக்கள் மாலையணிவிக்க கூடாது என்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செயல்பாடு அம்பேத்கரும், ஈ.வெ.ரா.,வும் ஒன்றா என்ற
விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மதசார்பின்மை என்ற பெயரில் ஹிந்து மதத்தை எதிர்ப்பதை சில கட்சிகள் கொள்கையாக கொண்டுள்ளனவே
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இஸ்லாமிய, கிறிஸ்தவ கூட்டங்களில் பங்கு கொண்டு ஹிந்து கடவுள்களை, நம்பிக்கைகளை அவமரியாதையாக பேசுவது, இஸ்லாமிய
பயங்கரவாதத்தை ஆதரிப்பது என செயல்படுகின்றனர். இதுதான் அவர்கள் கொள்கையா. ஏன் இப்படி விடுதலை சிறுத்தைகள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். அதனால் தான்
பட்டியலின மக்கள் அதிகமானோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து பா.ஜ.,வுக்கு, ஹிந்து மக்கள் கட்சிக்கு வருகிறார்கள்.
இதை பொறுக்கமுடியாமல் ஹிந்துமத கட்சிகள், பா.ஜ., ஆகியவைகளை அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிக்க விடமாட்டோம் என கூறுகின்றனர்.தி.மு.க.,வின் பின்னணியில் தான்
திருமாவளவன் செயல்படுகிறார். அதையும் தாண்டி அவர் நக்சல், இஸ்லாமிய மத அடிப்படை வாத அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டு அவர் நோக்கத்திற்கு செயல்படுகிறார்.டில்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு
அம்பேத்கர் சிலையை நெருங்க ஹிந்துத்துவா அமைப்பினரை விட மாட்டோம் என்கிறார்.
விவசாயிகள் போராட்டத்திற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்.
இதற்கு என்ன காரணம்
நடிகர் ரஜினி ஆன்மிக அரசியல் அறிவித்ததற்கு பிறகு அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டு வங்கியை இழந்து வருகின்றனர். பட்டியலின ஓட்டுவங்கி முழுக்க முழுக்க ரஜினிக்கும், பா.ஜ.,வுக்கும் மாறி வருகிறது. மாநில தலைவராக ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவரை நியமித்து அம்பேத்கர் கொள்கைகளை நடைமுறைப்படுத்த பா.ஜ., துவங்கியிருக்கிறது.இது திராவிட கட்சிகளில் சாத்தியமில்லை. ஓட்டு வங்கி இழப்பால் ஹிந்துக்களுக்கு எதிராக
விமர்சித்து வருகின்றனர்.
ஏப்., 14 அம்பேத்கர் பிறந்த நாள். அன்று அம்பேத்கர் மணிமண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கொடி கட்டினால், நாங்கள் காவி கொடிகட்டுவோம். வருங்காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முயற்சிக்கின்றனர். முதல்வர் பழனிசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரவுடிதனத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.
ரஜினி கட்சி துவங்கினால் யாருக்கு நஷ்டம்
ரஜினி கட்சி துவங்கினால் அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பு. எல்லா கட்சிகளிலும்
தொண்டர்கள் நல்லவர்களாக உள்ளனர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர்கள் தொண்டர்களாக உள்ளனர். பிற கட்சிகளில் பரம்பரை பரம்பரையாக
இருப்பவர்கள், ஒரேகுடும்பத்தை சேர்ந்தவர்கள். எம்.எல்.ஏ.,மகனுக்கு தான் எம்.எல்.ஏ., சீட் கிடைக்கும். மந்திரி மகனுக்கு தான் எல்லாமும் கிடைக்கும் என்ற நிலையுள்ளது. ரஜினி
அரசியலுக்கு வருவதால் பிற கட்சி தொண்டர்களும் மாற துவங்கி விட்டனர். ரஜினி அரசியல் கட்சி அறிவிப்புக்கு முன்பே அவருக்கு 15 சதவீத ஆதரவு உள்ளது. அவர் கட்சி துவங்கினால்
40 சதவீதத்திற்கு மேல்ஓட்டளிப்பர்.
ரஜினி கட்சியும், பா.ஜ.,வும் ஒரே அணியில் எதிர்காலத்தில் இடம் பெற வாய்ப்புண்டா
ரஜினியும், பா.ஜ.,வும் இணைந்து செயல்பட்டால் எதிர்காலத்தில் தமிழகத்தில் ஆட்சி
மாற்றம், அரசியல் மாற்றம் சாத்தியமாகும். அப்படியொரு வாய்ப்பு உருவாக வேண்டும் என நல்லவர்கள் விரும்புகிறார்கள்.இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.
அம்பேத்கரும், ஈ.வெ.ரா.,வும்
அர்ஜூன் சம்பத் கூறியதாவது:
* திராவிட இனவாத கொள்கைகளுக்கு சரியான இடம் குப்பை தொட்டி தான் என அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா., கால்டுவெல் பாதிரியரால்
பரப்பப்பட்ட ஆரிய திராவிட இனவாத கொள்கையை ஒப்புக் கொண்டதுடன், ஆரிய எதிர்ப்பு
மற்றும் திராவிட இனவாத கொள்கைக்கும் தனி திராவிட நாடு கோரிக்கைக்கும் ஆதரவு
தெரிவித்து செயல்பட்டவர்.
*அம்பேத்கர் உலகின் பல புகழ் பெற்ற பல்கலையில் படித்துபட்டம் பெற்றவர். உயர்கல்விக்காக அமெரிக்க சென்ற முதல் இந்தியர். ஆனால் ஈ.வெ.ரா. தனக்கு படித்தவர்கள் தேவையில்லை, தான் சொல்வதை நம்பி செயல்படுகிற முட்டாள்கள் தான் தேவை என கூறியவர்.
* அம்பேத்கர் மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிரானவர். முஸ்லிமாக மதம் மாறுவது தவறு என அறிவுறுத்தியவர். ஆனால் ஈ.வெ.ரா., முஸ்லிமாக மதம் மாறினால் தான் ஜாதி ஒழியும் என பரப்புரை செய்தவர்.
* இரட்டை வாக்குரிமை, விகிதாச்சார பிரதிநிதித்துவம் ஆகியவற்றை எதிர்த்து அம்பேத்கர் போராடிய போது, அதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்தார். அவர்களுடன்பேச்சுவார்த்தை நடத்தி பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது. பட்டியலின மக்களுக்காக அம்பேத்கர்
நடத்திய எந்த போராட்டத்திலும் ஈ.வெ.ரா., பங்கேற்றதில்லை.
* அம்பேத்கரை 1952 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடித்தவர்கள் காங்.,கம்யூ.,கள். முன்னாள் பிரதமர் நேரு முன்னின்று பிரசாரத்திலும் ஈடுபட்டார். பிறகு ஜனசங்கத்தின்
ஆதரவால் அம்பேத்கர் ராஜ்யசபைக்கு தேர்வானார்.
* அம்பேத்கர் ஜாதி தலைவர் அல்ல. சாதித்த தலைவர். அம்பேத்கர் கொள்கைகள் வேறு. ஈ.வெ.ரா.,கொள்கைகள் வேறு.இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE