திருப்பூர்;'வேட்டுவபாளையம் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தால், நிலத்தடிநீர் செறிவூட்டப்பட்டு, வேளாண் சாகுபடி வளம் பெறும்' என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.மங்கலம், இடுவாய், பூமலுார், 63 வேலம்பாளையம் கிராமங்கள் மற்றும் மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள ஊராட்சிகள், மேட்டுப்பாங்கான பகுதி என்பதால், இப்பகுதியில், 1,200 அடி ஆழத்துக்கு கீழ் தான் நிலத்தடி நீர் கிடைக்கிறது.நொய்யல் ஆற்று தண்ணீர் கிடைக்காமல், ஏராளமான குளம், குட்டைகள், வானம் பார்த்த பூமியாக மாறிப்போயுள்ளன. குறிப்பாக, நொய்யலில் இருந்து, 500 மீ.,தொலைவில் உள்ள, வேட்டுவபாளையம் குளம் மைதானமாக மாறிப்போனது.மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம், வறண்ட குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. 7 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.நல்லம்மன் தடுப்பணை அருகே, நொய்யலில் இருந்து தண்ணீர் எடுத்து, மோட்டார் மூலம், 'பம்ப்' செய்து, வேட்டுவபாளையம் குளம் உட்பட, 17 குளம், குட்டைகள், சிறு தடுப்பணைகளில் தண்ணீர் நிரப்பப்பட உள்ளது.விவசாயிகள் கூறுகையில், ''வேட்டுவபாளையம் குளத்துக்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்தால், வறட்சியான பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் உயரும்.குளங்களில் தண்ணீர் நிரப்பி செறிவூட்டினால், பழைய விவசாய கிணறுகளில் தண்ணீர் கிடைக்கும். ஊராட்சி ஆழ்குழாய் கிணறுகளிலும், தண்ணீர் மட்டம் உயரும்,'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE