பொள்ளாச்சி;நெரிசல் மிகுந்த பொள்ளாச்சி காந்தி சிலை பகுதியில், அரசியல் கட்சியினர் போராட்டம், தலைவர்கள் வருகையின் போது வரவேற்பு அளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், வாகன நெரிசல் அதிகரித்து, போக்குவரத்து ஸ்தம்பிப்பதால், மக்கள் நிம்மதியான பயணத்தை மேற்கொள்ள முடியமால் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.பொள்ளாச்சி - கோவை ரோடு, உடுமலை ரோடு, பல்லடம் ரோடு, பாலக்காடு ரோடு, என, நகரின் நான்கு முக்கிய ரோடுகள் சந்திப்பு பகுதியாக காந்தி சிலை உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, 'சிக்னல்' அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதியான இந்த இடத்தில், அரசியல் கட்சிகளின் கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டம், மறியல், அரசியல் கட்சி தலைவர்கள் வருகையின் போது வரவேற்பு அளிப்பது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. போக்குவரத்து நிறைந்த பகுதியில், 'மாஸ்' காட்ட வேண்டும் என்பதற்காக, கட்சியினரும் கூட்டத்தை கூட்டி விடுகின்றனர். ரோட்டை ஆக்கிரமித்து நிற்பதுடன், அழைத்து வரும் வாகனங்களும் ரோட்டை அடைத்து நிறுத்தப்படுகின்றன. இதனால், அந்த வழித்தடத்தில் நான்கு ரோடுகளிலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று விடுகின்றன.அரசியல் கட்சி தலைவர்களும், போக்குவரத்து பாதிப்பதையும், மக்கள் அவதிப்படுவதையும் பொருட்படுத்தாமல் நிதானமாக நின்று பேசுகின்றனர். ரோட்டிலேயே பட்டாசும் வெடிக்கின்றனர். பாதுகாப்பில் இருக்கும் போலீசாரும் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.காந்தி சிலை நெரிசல் மிகுந்த பகுதி என அதிகாரிகளுக்கு தெரியும். அவசர சிகிச்சைக்காக கோவை செல்லும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். அரசியல் கட்சியினர் அத்துமீறல் அரங்கேறும் போது, ஒட்டு மொத்தமாக போக்குவரத்து பாதிக்கப்படுவதை அனுமதி கொடுக்கும் அதிகாரிகளும் உணர வேண்டும். மாதத்தில் பாதி நாட்கள் ஏதாவது போராட்டம், அரசியல் கட்சியினர் வரவேற்பு நிகழ்ச்சிகள் இருப்பதால், மக்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த இடத்தில் அரசியல் கட்சியினருக்கு அனுமதி வழங்கக்கூடாது. திருவள்ளுவர் திடல், சர்க்கஸ் மைதானம், பல்லடம் ரோடு சந்திப்பு என, மாற்று இடத்தில் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.இதனால், மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது பற்றி சிந்தித்து, போலீஸ், வருவாய்துறை, நகராட்சி என அனைத்து துறைகளும் இணைந்து மாற்று இடங்களை தேர்வு செய்தால், பயனாக இருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE