ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு பூங்கா மற்றும் அணைப்பகுதி, நேற்று முதல் திறக்கப்பட்டதால், இயற்கையை ரசிக்க மக்கள் குடும்பத்துடன் திரண்டனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, வால்பாறை முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளது. தினமும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் 16ம் தேதி, ஆழியாறு பூங்கா மற்றும் அணைப்பகுதி மூடப்பட்டது. குரங்கு அருவியில் குளிக்க தடை விதித்து, வால்பாறை செல்லவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.அதன்பின், அறிவிக்கப்பட்ட தளர்வுகளால், வால்பாறைக்கு செல்ல 'இ-பாஸ்' நடைமுறை அமல்படுத்தப்பட்டது. தற்போது, 'இ-பாஸ்' முறையும் ரத்து செய்யப்பட்டு சுற்றலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், அரசு உத்தரவுப்படி, 274 நாட்களுக்குப்பின், நேற்று ஆழியாறு பூங்கா, அணைப்பகுதி திறக்கப்பட்டது.இதையடுத்து, காலை முதலே சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வந்து, குடும்பத்துடன் விளையாடி மகிழ்ந்ததுடன், அணைப்பகுதியின் அழகை கண்டு ரசித்தனர். நேற்று, செவ்வாய் கிழமை என்பதால், கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.வால்பாறையில் சுற்றுலா பகுதிகள், ஆழியாறு பூங்கா, குரங்கு அருவி திறக்கப்பட்டதால், இனி வரும் நாட்களில், ஆழியாறு, வால்பாறையில் மீண்டும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும். சுற்றுலா பயணிகளை நம்பியிருக்கும் கடைக்காரர்கள், வியாபாரிகள் வாழ்வாதாரம் காக்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE