பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், உழவர்களுக்கும், வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்த, தோட்டக்கலை துறை சார்பில், உழவர், அலுவலர் தொடர்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.பெரியநாயக்கன்பாளையத்தில் தோட்டக்கலை துறை அலுவலர்கள், கிராமங்களுக்கு சென்று நவீன தோட்டக்கலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் தோட்டக்கலை மானிய திட்டங்களை, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கவும், பயிர் சாகுபடி நிலவரம் குறித்த தகவல்களை சேகரித்து, அதற்கேற்ப அறிவுரை வழங்கவும், விவசாயிகளிடையே கூட்டங்கள் நடத்தி விளக்கவும், தமிழக அரசு உழவர், அலுவலர் தொடர்பு திட்டம், நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.சந்திப்புதிட்டத்தின் படி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கிராம ஊராட்சிகளில், நிரந்தர திட்டத்தின்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில், விவசாயிகள் மற்றும் உழவர் குழுக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், குறைந்தபட்சம் பத்து முன்னோடி விவசாயிகளை, இதில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் இரண்டு பேர் உட்பட தேர்வு செய்து, அவர்களுக்கு நவீன தோட்டக்கலை தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானிய திட்டங்கள் குறித்த விளக்கம், பயிற்சிகள், உரிய இடைவெளியில் தொடர்ந்து வழங்கப்படும். பயிற்சி பெற்ற விவசாயிகள், தோட்டக்கலை துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுவார்கள்.வட்டார அளவில், தோட்டக்கலை உதவி இயக்குனர் தலைமையில், தமிழ்நாடு வேளாண் பல்கலை விஞ்ஞானி மற்றும் தோட்டக்கலை அலுவலர் அல்லது துணை தோட்டக்கலை அலுவலர் கொண்ட விரிவாக்க குழு அமைக்கப்பட்டு, பிரதி மாதம், கிராம ஊராட்சி வாரியாக பயணத்தை வகுத்து செயல்படுத்தப்படும்.தொடர்பு மையம்ஒவ்வொரு கிராம ஊராட்சி அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அரசு அலுவலகம், கிராம பொது கட்டடங்கள், முன்னோடி விவசாயிகளின் தோட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஓரிடத்தில் ஒரு தொடர்பு மையம் நிர்ணயிக்கப்பட்டு, வாரநாட்களில் பங்கேற்கும் இடம் குறித்த தகவல்களை 'வாட்ஸ் ஆப்' அல்லது பிற சமூக வலைதளங்கள் வாயிலாக, அனைத்து விவசாயிகளுக்கும், வார ஆரம்பித்திலேயே, உதவி தோட்டக்கலை அலுவலர்களால் தெரிவிக்கப்படும்.மேலும், கிராம வாரியான தொடர்பு மைய விபரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாவட்ட மற்றும் மாநில அலுவலகங்களில் பராமரிக்கப்படும். பின்பற்றப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள், பூச்சி நோய் தாக்குதல் நிலவரம், உரமிடுதல், இதர சாகுபடி பணிகள் தொடர்பான பிரச்னைகள், வானிலை முன்னறிவிப்பு, விவசாயிகளுடன் கலந்தாய்வு பயிற்சி போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என, பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலை உதவி இயக்குனர் வித்யா தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE