மேட்டுப்பாளையம்;''விவசாய விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய, கோவை மாவட்டத்தில், ஏழு இடங்களில், ரூ.37 கோடி மதிப்பில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என, மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண் நவீன மயமாக்கல் திட்டம், விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில், மேல் பவானி உபவடிநிலப் பகுதி விவசாயிகளுக்கு, இடைமுக பணிமனை இரண்டு நாள் கருத்தரங்கு, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று துவங்கியது.கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:கோவை மாவட்டம், தென்மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவ மழையும் பெய்யக்கூடிய பகுதியாக அமைந்துள்ளது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அளவுக்கு அதிகமாகவும், வடகிழக்கு பருவமழை ஓரளவும் பெய்துள்ளது. இதனால் அணைகள் நிரம்பியுள்ளன; நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தண்ணீரை வைத்து, காய்கறி செடிகள் அதிகளவில் பயிர் செய்துள்ளனர். தென்னையும், வாழையும் விளையும் மாவட்டமாக விளங்கியுள்ளது.விவசாயிகளுக்கு, நுண்ணுயிர் பாசன திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை, தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இதில், 80 கோடி ரூபாய் மானியங்களுடன், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை வாயிலாக வழங்கப்பட உள்ளது. புதிதாக கூட்டு பண்ணை முறையை அறிமுகம் செய்து, அதில், 100 குழுக்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை தரம் பிரித்து விற்பனை செய்யவும், மதிப்புக்கூட்டி விற்பனை செய்யவும், பல்வேறு திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதிக விலை கிடைக்க, விவசாயிகளுக்கு யுத்திகள் வழங்க, இது மாதிரியான கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. கோவை மாவட்டத்தில், 37 கோடி மதிப்பில், ஏழு இடங்களில், விவசாய விளைபொருட்களை தரம் உயர்த்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய பயிற்சியையும், அனுபவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பின், விளைபொருட்களை சந்தைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பார்த்திபன், வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி, வேளாண் அறிவியல் நிலைய முதுநிலை விஞ்ஞானி குமாரவடிவேல் உட்பட பலர் பேசினர்.வேளாண் துணை இயக்குனர் சுந்தரவடிவேலு வரவேற்றார். விவசாயிகளுக்கு கையேடுகளையும், இடுபொருட்களையும் கலெக்டர் வழங்கினார். முன்னதாக, வனக்கல்லுாரி வளாகத்தில் அமைத்திருந்த வேளாண் வணிக கண்காட்சியை, கலெக்டர் திறந்து வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE