புதுடில்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் பஞ்சாப் விவசாயிகள் 'சட்டங்களை நீக்க வைப்போம்' என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் டில்லி எல்லையில் தொடர்ந்து 20வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூறியதாவது: சட்டங்களை திரும்பப் பெற முடியாது என அரசு கூறுகிறது. ஆனால் சட்டங்களை திரும்பப் பெற வைப்போம் என நாங்கள் எச்சரிக்கிறோம். பேச்சு நடத்துவதற்கு தயாராக உள்ளோம். ஆனால் உறுதியான திட்டத்துடன் அரசு முன் வர வேண்டும்.

டில்லி எல்லையில் நீண்ட நாட்கள் இருந்தால் போராட்டம் நீர்த்து போய்விடும் என அரசு நினைத்தால் அது தவறாகும். எல்லையில் நாங்கள் இருக்கும் ஒவ்வொரு நாளும் போராட்டம் தீவிரமடையும். டில்லி - நொய்டா இடையே யான சில்லா எல்லையை முடக்கும் போராட்டத்தில் இன்று ஈடுபட உள்ளோம்.
பிரச்னைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் மேலும் தீவிரமடையும். இந்த போராட்டத்தால் நாளொன்றுக்கு ஒரு விவசாயி உயிரிழக்கிறார். அவ்வாறு உயிர் நீத்தவர்களுக்காக 20ம் தேதி இரங்கல் கூட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE