புதுடில்லி: நம் நாட்டில் 12 மாநிலங்களில் 60 சதவீதத்திற்கும் மேலான பெண்கள் 'இன்டர்நெட்' எனப்படும் இணைய வசதியை பயன்படுத்தவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுதும் இணையம் அனைத்து துறைகளிலும் கோலோச்சி வருகிறது. கொரோனாவால் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு இணையம் வாயிலாக வகுப்புகள் நடக்கின்றன. இணையமின்றி வாழ்வில்லை என்ற நிலைக்கு இளைஞர்கள் மாறியுள்ளனர். ஆனால் நம் நாட்டில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் இணையத்தை பயன்படுத்துவது இல்லை என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய குடும்பநல சுகாதார நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வின் முடிவுகள் வருமாறு: மஹாராஷ்டிராவில் 38 சதவீத பெண்கள் மட்டுமே இணையத்தை பயன்படுத்துகின்றனர். ஆந்திரா, அசாம், பீஹார், குஜராத், கர்நாடகா மேகாலயா, தெலுங்கானா, மேற்கு வங்கத்தில் 40 சதவீதத்திற்கும் குறைவான பெண்களே இணையத்துடன் இணைந்துள்ளனர்.
ஆந்திரா, அசாம், பீஹார், மேகாலயா, திரிபுரா, மேற்கு வங்கம், அந்தமானில் 50 சதவீதம் ஆண்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.ஒட்டு மொத்தமாக நாட்டில் 60 சதவீதத்துக்கு மேலான பெண்கள் இணையத்தை பயன்படுத்துவது இல்லை.
மேலும் மேற்கு வங்கத்தில் 41.6 சதவீதம் பெண்கள் 18 வயது நிறைவடையும் முன் திருமணம் செய்துள்ளனர். இவர்களின் விகிதம் பீஹார், திரிபுரா, ஆந்திரா, அசாம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகாவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.அசாம், பீஹார், குஜராத், திரிபுரா, மேற்கு வங்கம் மற்றும் லடாக்கில் 21 வயது நிறைவடையும் முன் திருமணம் செய்த ஆண்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE