புதுடில்லி: 'ஹோமியோபதி மருத்துவர்கள், கொரோனா நோயாளிகளின் பாதிப்பை குறைக்க மருந்து வழங்கலாம்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
'கொரோனா பாதிப்புக்கு, அரசு அங்கீகரித்த மருந்துகளை, நோய் எதிர்ப்பு சக்திக்கு மட்டும், 'ஆயுஷ்' மருத்துவர்கள் வழங்கலாமே தவிர, நோய்க்கு தீர்வளிப்பதாக தெரிவிக்க கூடாது' என, கேரள உயர்நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து, ஏ.கே.பி., சத்பவானந்தா ஹோமியோ மருத்துவ கல்வி மையம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.இந்த மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதி, அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:உலகளவில், பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள், கொரோனாவுக்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.ஆனால், ஹோமியோபதியில் அவ்வாறு நடப்பதாக தெரியவில்லை. ஹோமியோபதி மருந்து, நோயை தீர்க்காது; ஆனால் நோயாளிகளுக்கு தீர்வளிக்கும்.மத்திய அரசின் 'ஆயுஷ்' அமைச்சகம், கொரோனாவால் ஏற்படும் காய்ச்சல் போன்ற சில அறிகுறிகளுக்கு ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நோயை தடுக்கவும், சிகிச்சையில் ஓரளவு முன்னேற்றம் காணவும், பாதிப்பை குறைக்கவும் கூடிய மருந்துகளை, தகுதியுள்ள ஹோமியோபதி மருத்துவர்கள் அளிக்கலாம். ஆனால், கொரோனா நோய்க்கு தீர்வு என கூறி சிகிச்சை அளிக்கக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE