ஈரோடு: ஈரோட்டில் பிரபல கட்டுமான நிறுவனம், அவர்களுக்கு சொந்தமான இடங்களில், இரண்டாவது நாளாக, வருமான வரி சோதனை நடந்தது. இதில், 18 கோடி ரூபாய் ரொக்கம், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஈரோடு, தங்கபெருமாள் வீதியில், ஸ்ரீபதி அசோசியேட்ஸ் கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம் உள்ளது. இயக்குனர்களாக சீனிவாசன், சேகர், பூபதி உள்ளனர். கட்டுமான தொழிலுடன், ஸ்ரீபதி பஸ் டிரான்ஸ்போர்ட், சோலி மசாலா பொருள் தயாரிப்பு, கல்குவாரி, ஸ்ரீபதி கட்டுமான பொருட்கள் தயாரிப்பு, ஸ்ரீபதி திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நடத்தி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில், அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளையும் செய்து வருகின்றனர். கர்நாடகா மாநிலத்திலும், அரசு கட்டட பணியை, கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் காலை, பல்வேறு குழுக்களாக பிரிந்து நிறுவனத்துக்கு சொந்தமான, தங்கபெருமாள் வீதியில் உள்ள கட்டுமான நிறுவனம், இயக்குனர்களின் வீடு, அலுவலகங்கள் என, 15க்கும் மேற்பட்ட இடங்களில், ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்த சோதனையில், 14 கோடி ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இயக்குனர்களிடம் விசாரணை நடந்தது. இரண்டாம் நாளாக நேற்றும், 15 இடங்களிலும் வருமான வரி சோதனை தொடர்ந்தது. இதில் மேலும் கணக்கில் வராத, நான்கு கோடி ரூபாய் ரொக்கம், பல கோடி ரூபாய் மதிப்பில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. சோதனை தொடர்ந்து நடக்கிறது. சோதனை நடக்கும் இடங்களில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க., முக்கிய புள்ளிகளின் பினாமியாக இயக்குனர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE