ஓசூர்: சூளகிரி அருகே, வறண்டுள்ள சின்னாறு அணையில், கெலவரப்பள்ளி அணை உபரி நீரை நிரப்ப, விவசாயிகளின் கோரிக்கையின்படி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணை நிரம்பினால், 2,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மழை நீரை மட்டுமே நம்பியுள்ள இந்த அணை, கடந்த, 2017 அக்., நிரம்பியது. அதன் பின், போதிய மழையின்றி, அணை வறண்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரிநீர், மருதாண்டப்பள்ளி ஏரி வழியாக, சூளகிரி துரை ஏரி வரை வருவதால், அங்கிருந்து சின்னாறு அணை வரை நீரை திருப்பி விட வேண்டும் என, பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வாய்க்கால் வசதி இருந்தும், பொதுப்பணித்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கெலவரப்பள்ளி அணை உபரி நீர் ஆற்றில் சென்று கடலில் கலக்கிறது. இந்நிலையில், சூளகிரி தாலுகா அலுவலகத்தில், தர்மபுரி பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு பொறியாளர் குமார், தாசில்தார் பூவிதன் தலைமையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம், நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, விவசாயிகள் தரப்பில் மனு வழங்குமாறும், அதை அரசிற்கு அனுப்பி அனுமதி கிடைத்தால், சின்னாறு அணைக்கு நீர் நிரப்ப நடவடிக்கை எடுப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெற்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE