நாமக்கல்: மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு, குறைவான விலை கிடைப்பதால், நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
நாமக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில், மரவள்ளி கிழங்கு சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. கிழங்கிலிருந்து மாவு, ஜவ்வரிசி உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் சேகோ, ஸ்டார்ச் ஆலைகள் அதிகம் உள்ளன. இங்கிருந்து, வட மாநிலங்களுக்கு ஜவ்வரிசி, கிழங்கு மாவு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் மூலம் சேமியா, சிப்ஸ் உள்ளிட்ட, 64 வகையான உணவு பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு மூலப்பொருளான மரவள்ளி கிழங்கு, நாமக்கல் மாவட்டத்தில், 5,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கார்த்திகை, மார்கழியில், அறுவடை சீசன் துவங்குகிறது. தற்போது, மரவள்ளி கிழங்கிற்கு விலை குறைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த திருமலைகிரியை சேர்ந்த விவசாயி ஜெயராமன், 55, கூறியதாவது: இப்பகுதியில், முள்ளுவாடி கிழங்கு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. 75 கிலோ ஒரு மூட்டை, 390, லேபர், வாடகை, 80 என, மொத்தம், 470 ரூபாய் வழங்குகின்றனர். அதன் மூலம் கிலோவுக்கு, 5.20 ரூபாய் கிடைக்கிறது. ஒரு கிலோவுக்கு, 10 ரூபாய் கிடைத்தால் மட்டுமே, விவசாயிக்கு லாபம் கிடைக்கும். தற்போது, பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்யும் நிலையில், அறுவடை செய்யும்போது, 39 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன், டன் பாயின்ட், 550 ரூபாய் கிடைத்த நிலையில், தற்போது, 160 ரூபாய் குறைத்து, 390 ரூபாய்க்கே விற்பனையாகிறது. அதனால், விவசாயிகள் விழிபிதுங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE