போளூர்: போளூர், 'தரணி சர்க்கரை ஆலை' விவசாயிகளுக்கு, 26 கோடி ரூபாய் பாக்கி தொகையை கொடுக்காமல் அலைக்கழித்து வந்ததால், வேறு ஆலைகளுக்கு கரும்பை அனுப்ப, அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கரைப்பூண்டியில் உள்ள, 'தரணி சர்க்கரை ஆலை'க்கு, போளூர், கலசப்பாக்கம், ஆரணி, துரிஞ்சாபுரம், சேத்துப்பட்டு, பெரணமல்லூர் கண்ணமங்கலம், தேவிகாபுரத்தை சேர்ந்த விவசாயிகள், அரவைக்கு கரும்பு அனுப்பி வருகின்றனர். கடந்தாண்டு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு, 26 கோடி ரூபாய் பாக்கியை கொடுக்காமல் ஆலை நிர்வாகம் அலைக்கழித்து வருகிறது. கொரோனா ஊரடங்கால், ஆலை இயக்குவது நிறுத்தப்பட்டதால், 240 தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். நிலுவை தொகையை கோரி, விவசாயிகள் போராடி வரும் நிலையில், கடந்த, 11ல் போளூர் தாலுகா அலுவலகத்தில், முத்தரப்பு கூட்டம் நடந்தது. இதில், நிறுவன சொத்தை விற்று இம்மாத இறுதிக்குள், 26 கோடி ரூபாயை பட்டுவாடா செய்து விடுவதாக, ஆலை நிர்வாக பொதுமேலாளர் கந்தசாமி தெரிவித்தார். ஆனால், இதை விவசாயிகள் ஏற்கவில்லை. இந்நிலையில், தமிழக சர்க்கரை துறை கமிஷனர் ஆனந்தகுமார், போளூர், 'தரணி சர்க்கரை ஆலை'க்கு, உட்பட்ட பகுதிகளில், தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள கரும்பை, வேலூர், திருப்பத்தூர், ஆம்பூர், செய்யாறு, செங்கம், பண்ணாரி அம்மன் சுகர்ஸ் மற்றும் விழுப்புரம் ராஜாஸ்ரீ ஆகிய சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பலாம் என தெரிவித்துள்ளார். இதனால், கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE