சோமங்கலம் சித்தேரி ஏரி நிரம்பியுள்ள நிலையில், அதில் ஊராட்சி நிர்வாகம் குப்பை கழிவுகள் கொட்டுவதால், ஏரி நீர் மாசடைகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகாவில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி, சித்தேரி என, இரண்டு ஏரிகள் உள்ளன.இதில், 80 ஏக்கர் பரப்பளவு உடைய சித்தேரி நீரை பயன்படுத்தி, சோமங்கலம், புதுச்சேரி கிராமங்களில், 300 ஏக்கருக்கு விவசாயம் செய்யப்படுகிறது. பல ஆண்டுகளாக துார் வாரப்படாததால், இந்த ஏரி, தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர், நவம்பர் மாதம், இந்த ஏரியில், அரசு அனுமதியுடன் மண் குவாரி இயங்கியது.
அப்போது, 10 அடிக்கு மேல் துார் வாரி, ஏரி ஆழப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அண்மையில், வடகிழக்கு பருவ மழை அதிகம் பெய்தும், சித்தேரிக்கு நீர்வரத்து குறைவாக இருந்தது. இதனால், சோமங்கலம் பெரிய ஏரி நிரம்பி, வெளியேறிய உபரி நீரை, சித்தேரி ஏரிக்கு செல்லும் வகையில் கால்வாய் வெட்டினர்.இதன் காரணமாக, சித்தேரி நீர்மட்டம் கிடுகிடுவென நிரம்பியது. ஐந்து ஆண்டுகளுக்கு பின், சித்தேரி ஏரி நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில், சோமங்கலம் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகள், சித்தேரி ஏரியில் கொட்டுவதால், ஏரி நீர் மாசடைகிறது.
ஏரியின் உள்ளே குப்பை கொட்டுவதை, ஊராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என, சோமங்கலம் கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE