ஊத்துக்கோட்டை : தொடர்ந்து பெய்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நீரில் மூழ்கியதை கண்ட விவசாயிகள், சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஊத்துக்கோட்டை பேரூராட்சி மற்றும் எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள், சம்பா பருவமான, ஜூலை- - ஜனவரி வரை உள்ள மாதங்களில், நெல் பயிரிட்டு உள்ளனர்.இதில், ஊத்துக்கோட்டை, மாம்பாக்கம், வேளகாபுரம், வடமதுரை, செங்காத்தாகுளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், விவசாயிகள், 18 ஆயிரம் ஏக்கர் நிலத்தில், நெல் பயிரிட்டு வந்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், அறுவடைக்கு விவசாயிகள் தயார் நிலையில் இருந்தனர்.
கடந்த மாதம், 'நிவர், புரெவி' புயலால் பெய்த பலத்த மழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின.அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பண நஷ்டம் ஏற்பட்டு, கடனை எப்படி அடைப்பது என, தெரியாமல் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.இதுகுறித்து, ஒன்றிய வேளாண் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒன்றியத்தில், 18 ஆயிரம் ஏக்கர் நெல் பயிரிட்டுள்ளனர். அறுவடைக்கு தயாரான நிலையில், மழை வெள்ளத்தால் பயிர் நீரில் மூழ்கியது.ஒன்றியத்தில், 90 சதவீதம் விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்துள்ளனர். தற்போது, பாதிப்பு உள்ளதா என, ஆய்வு செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE