'நடிக்கும் போது, ஏதாவது ஒரு காட்சியில் மடியில் அமர்ந்திருப்பார்; அதை பெரிதாக கூறுவதா...' என, கண்டிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராசிரியர் அருணன் அறிக்கை: 'எம்.ஜி.ஆர்., எங்கள் சொத்து. அவர் மடியில் அமர்ந்தவன் நான்' என்கிறார் நடிகர் கமல். தலைவர்களே எச்சரிக்கை. குழந்தைகளை மடியில் உட்கார வைக்காதீர்கள்; ஆபத்து.
'அடேங்கப்பா... தாத்தா கருணாநிதி போல பேச முயன்று, தோற்றுள்ளீர்கள். தலைவர்கள் தோன்றுகின்றனர், உருவாக்கப்படுவதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை: பா.ஜ.,வின் சூழ்ச்சி- அடிமை, அ.தி.மு.க.,வின் துரோகத்தால், தமிழகம் தன் உரிமைகளை இழந்து கொண்டே வருகிறது.
'ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு போட்டால், போராடியவர்கள் சிறை செல்வது நிச்சயம்...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஷோரூம்கள் முன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் நிறுவனங்களின் முன், இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்ட விரோதம் மட்டுமல்ல, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல். மக்களின் வெறுப்பையே பெறுவீர்கள்.
'டில்லி நிலவரத்தை, இங்கே இருந்தபடி, அப்படியே புட்டுபுட்டு வைக்கிறீர்களே... என, 'பாராட்டத்' தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை: பெயரளவுக்கு பேச்சு நடத்திவிட்டு, மோடி அரசு வேடிக்கை பார்க்கிறது. துணை ராணுவத்தை இறக்கியதோடு மட்டுமில்லாமல், சாலைகளில் முள்வேலிகள், 'ட்ரோன்' மூலம் கண்காணிப்பு என போராட்டத்தை, எப்படியாவது வலுவிழக்க செய்ய வேண்டும் என்பதிலேயே மோடி அரசு குறியாக உள்ளது.தி.மு.க., கட்டியெழுப்பிய தமிழகம் சீரழிவது போதும். தமிழகத்தை காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மானத்தமிழருக்கும் உண்டு.
'பா.ஜ., மீது தி.மு.க.,வுக்கு, அதனால் தான், 'காண்டு' போல...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி: பா.ஜ., ஆட்சியில் அங்கம் வகிக்கும் போது, தி.மு.க., அமைச்சர்களால் ஊழல் செய்ய முடியவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த போது ஊழல் செய்தனர். இருப்பவர்கள் சரியாக இருந்தால் நடப்பவை சரியாக நடக்கும்.
'மத்திய அரசு, 971 கோடி செலவில் புதிய பார்லிமென்ட் கட்டப்படும் என்று தான் அறிவித்துள்ளது; மீதியை, காங்கிரஸ் கொடுக்க உள்ளதா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை: கடந்த, 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, பார்லிமென்ட் கட்டடம் இருக்கும்போது, 20 ஆயிரம் கோடி ரூபாயில் புதிதாக, பார்லிமென்ட் கட்டடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE