புதுடில்லி : 'கொரோனா' வைரஸ் பரவல் தீவிரமடைந்தபோது, அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, 'பிஎம்கேர்ஸ்' என்ற புதிய நிதியத்தை அறிவித்தார். அது அரசு நிதியமா அல்லது தனியார் நிதியமா என்பதில் குழப்பம் தொடர்கிறது.
நாட்டில், வைரஸ் பரவல் அதிகரித்தபோது, அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக, 'பிஎம் கேர்ஸ்' என்ற புதிய நிதியத்தை, பிரதமர், நரேந்திர மோடி, மார்ச் மாத இறுதியில் அறிவித்தார். இந்த நிதியத்திற்கு, பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் நன்கொடைகள் அளித்தன.இதையடுத்து, இந்த நிதி தொடர்பான சந்தேகங்களை, பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.தன்னார்வலர் அஞ்சலி பரத்வாத், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மார்ச் மாத இறுதியில் இது குறித்து கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு, மத்திய வர்த்தக விவகார அமைச்சகம் அளித்திருந்த பதிலில், இது, 'மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள நிதி' என, பதில் அளிக்கப்பட்டது.இந்த நிதியத்திற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பல மூத்த அமைச்சர்கள் அடங்கிய, அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. கடந்த, மார்ச், 27ல், இந்த அறக்கட்டளை, டில்லியில் பதிவு செய்யப்பட்டது.
அதற்கு அடுத்த நாள், மத்திய வர்த்தக விவகாரம் அமைச்சகம், ஒரு அறிவிப்பை வெளியிட்டது. 'சி.எஸ்.ஆர்., எனப்படும், சமூகப் பங்களிப்பு திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் இந்த நிதியத்திற்கு நன்கொடை அளிக்கலாம்' என, அதில் கூறப்பட்டது.அதன்படி, பல தனியார் நிறுவனங்கள், இந்த நிதியத்திற்கு, கோடிக் கணக்கில் நன்கொடை அளித்தன.
கம்பெனிகள் சட்டத்தின்படி, மத்திய அரசு அல்லது மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டுள்ள நிதிகளுக்கு, சி.எஸ்.ஆர்., திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் நன்கொடை அளிக்கலாம் .இதற்கிடையே, பிஎம்கேர்ஸ் திட்டத்துக்காக பதிவு செய்யப்பட்டுள்ள அறக்கட்டளை தொடர்பான ஆவணங்கள் சமீபத்தில், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதில், 'இந்த அறக்கட்டளை, அரசால் உருவாக்கப்பட்ட நிதி அல்ல' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சமீபத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கும், 'தனியார் நிதியம் என்பதால் விபரங்களை அளிக்க முடியாது' என, பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.இது உண்மையாக இருந்தால், சி.எஸ்.ஆர்., திட்டத்தின் கீழ் நன்கொடைகள் பெறுவதற்கு, இந்த நிதியத்திற்கு அதிகாரம் இல்லை. இந்நிலையில், பிஎம் கேர்ஸ் நிதியம், அரசின் நிதியமா, தனியார் நிதியமா என்பதில் குழப்பம் தொடர்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE