சென்னை:தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவனுக்கு எதிரான, அவதுாறு வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில், லஞ்சம் பெறுவதாக, முன்னாள் கவர்னர் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பேசியிருந்தார்.மேலும், மதுக் கடைகள் தொடர்பாக விவகாரத்திலும், தமிழக அரசை விமர்சித்து இருந்தார். இளங்கோவனுக்கு எதிராக, எட்டு அவதுாறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.அந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, இளங்கோவன் சார்பில், மனுக்கள் தாக்கப்பட்ட செய்யப்பட்டன.
இம்மனுக்கள், நீதிபதி சதீஷ்குமார் முன், நேற்று, விசாரணைக்கு வந்தது.இளங்கோவன் சார்பில், வழக்கறிஞர் ஆர்.செல்லமுத்து ஆஜராகி, ''வழக்கு தொடர அனுமதி வழங்கி, பிறப்பித்த அரசு உத்தரவில், இளங்கோவன் பேச்சு குறித்து, எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.
அரசு தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ''துணைவேந்தர் நியமனம் அலுவல் பணி சம்பந்தப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை, மனுதாரர் எதிர் கொள்ள வேண்டும்; ரத்து செய்ய கூடாது,'' என்றார்.இதையடுத்து, நீதிபதி சதிஷ்குமார், ''அவதுாறு வழக்கு தொடர்வதற்கு முன், அரசு வழக்கறிஞர் முதலில் திருப்தி அடைய வேண்டும். ஆனால், புகாரில் உள்ளது பற்றி, அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை,'' என்றார்.
அதைத் தொடர்ந்து, இளங்கோவனுக்கு எதிரான நான்கு வழக்குகளை ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார். இனிமேலாவது முறையான நடைமுறையை பின்பற்றும்படி, அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தும்படி, தலைமை குற்றவியல் வழக்கறிஞரிடம் நீதிபதி தெரிவித்தார். மற்ற நான்கு வழக்குகளின் விசாரணையை, நீதிபதி தள்ளிவைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE