கரூர் : ''லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த கட்சிகள், தற்போதும் கூட்டணியில் தொடர்கின்றன,'' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று, 627 கோடி ரூபாய் மதிப்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன், ஆய்வு மேற்கொண்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
இந்தியாவில், கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கவில்லை. கிடைத்தவுடன், தமிழகத்தில் இலவசமாக வினியோகம் தொடங்கும். விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் தவறானது.இத்தகவல், எதிர்க்கட்சியினரால் விஷமத்தனமாக பரப்பப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு, தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதில் மாற்றம் இல்லை.நான் விவசாயி என்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எனக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இடைத்தரகர்கள் நலன்களுக்காக விவசாயிகளை, எதிர்க்கட்சியினர் தவறாக வழிநடத்துகின்றனர்.
வேளாண்மை தொடர்பான, மூன்று சட்டங்களில், தமிழக விவசாயிகளை பாதிக்கும் அம்சம் என்ன என்று கூற முடியுமா?வேளாண் சட்டத்தில் உள்ள பாதகமான அம்சங்களை சொல்லுமாறு கேட்டால், எதிர்க்கட்சிகளிடம் பதில் இல்லை. தமிழகத்தில், 41 சதவீத மாணவர்கள், அரசு பள்ளிகளில் படித்து வரும் நிலையில், 40 இடங்கள் கூட மருத்துவ படிப்பில், அவர்களுக்கு கிடைக்காத நிலை இருந்தது.
'நீட்' தேர்வால், அரசு பள்ளி மாணவர்கள் மேலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. இது, யாரும் கோரிக்கை வைத்து, சட்டம் இயற்றப்படவில்லை. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த கட்சிகள், தற்போதும் கூட்டணியில் தொடர்கின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE