சென்னை:'நிவர்' புயல் நிவாரண பணிகளுக்கு, 6 கோடி ரூபாய் மட்டும் வழங்கப்பட்டுள்ளதால், கூடுதல் நிதிக்கு, வேளாண் துறையினர் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில், இம்மாதம் உருவான, நிவர் புயல் காரணமாக, பல மாவட்டங்களில் மழை கொட்டியது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார் உட்பட, 18 மாவட்டங்களில் நெல் உள்ளிட்ட வேளாண் பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் சேதம் அடைந்தன. பயிர் சேதங்களை, மத்திய குழுவினர் ஆய்வு செய்து சென்றுள்ளனர். இன்னும், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
இதற்கிடையே, நிவர் புயல் நிவாரண பணிகளுக்கு, வேளாண் துறைக்கு, 5 கோடி ரூபாயும், தோட்டக்கலைத் துறைக்கு, 1 கோடி ரூபாயும், தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தேர்தல் நேரம் என்பதால், ஒருவருக்கு கொடுத்து, மற்றவர்களுக்கு கொடுக்க முடியா விட்டால், சிக்கல் ஏற்படும்.
எனவே, அரசு வழங்கிய நிதியை செலவிடாமல், அடுத்தகட்ட நிதியை எதிர்பார்த்து, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் காத்திருக்கின்றனர். இது தெரியாமல், நிவாரண நிதி கேட்டு, வேளாண் அலுவலகங்களுக்கு, விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். இது, அதிகாரிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE