சென்னை:திறந்தவெளியில் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாசார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை, வரும், 19ம் தேதி முதல் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தமிழகத்தில், மார்ச், 25 முதல் ஊரடங்கு உத்தரவு, பல்வேறு தளர்வுகளுடன், அமலில் இருந்து வருகிறது.இந்நிலையில், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:ஏற்கனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்து திறந்தவெளியின் அளவிற்கேற்ப, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், அதிகபட்சம், 50 சதவீதத்திற்கு மிகாமல் பங்கேற்கும் வகையில், சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாசார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை, வரும், 19ம் தேதி முதல் நடத்த, அனுமதி அளிக்கப்படுகிறது.
இக்கூட்டங்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடமும், சென்னை மாநகராட்சியில், போலீஸ் கமிஷனரிடமும், உரிய முன் அனுமதி பெற வேண்டும். கூட்டம் நடத்துவோர், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.பொதுமக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும், கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும், அடிக்கடி சோப் பயன்படுத்தி, கை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
அவசிய தேவை இல்லாமல், வெளியில் செல்வதை, தவிர்க்க வேண்டும். அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் தான், இந்த நோய் தொற்று பரவலை, முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.எனவே, அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்திற்கும், பொது மக்கள் தொடர்ந்து, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE