சென்னை:சென்னை ஐ.ஐ.டி.,யில், மேலும் எட்டு மாணவர்களுக்கும், அண்ணா பல்கலையில், ஆறு மாணவர்களுக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் மற்றும் உணவக பணியாளர்கள், அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
உறுதி
அதன்படி, நேற்று முன்தினம் வரை, 183 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டு, கிண்டி, அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவ காரணமான உணவகம் மூடப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே, மேலும் 141 மாணவர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள், நேற்று வெளிவந்தன. அதில், எட்டு மாணவர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் வாயிலாக, ஐ.ஐ.டி.,யில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 191 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யை உதாரணமாக வைத்து, அனைத்து பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்களிலும், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள, தமிழக சுகாதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஆறு மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து, மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை விடுதிகளின் அருகில், கொரோனா தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களை, தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி நல அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்டோர், நேற்று ஆய்வு செய்தனர். மேலும், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நடவடிக்கை
சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:சென்னை ஐ.ஐ.டி.,யில், 1,104 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, 191 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில், 550 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பின்பற்றாத நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தடுப்பூசி, விரைவில் வரும். அதுவரை, முக கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை பின்பற்றியும், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.
அச்சம் வேண்டாம்!
'கொரோனா தொற்று
உறுதியான மாணவர்களுக்கு, அறிகுறி எதுவும் இல்லை என்பதால், பெற்றோர்
அச்சப்பட வேண்டாம்' என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலை
வளாகத்தில் உள்ள, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு, கொரோனா
பரிசோதனை நடத்தப்பட்டது. மொத்தம், 500 பேருக்கு நடத்திய சோதனையில், ஆறு
பேருக்கு தொற்று உறுதியானது.
இது குறித்து, கிண்டி இன்ஜி., கல்லுாரி
முதல்வர் இனியன் அளித்த பேட்டி:மொத்தம், 500 பேருக்கு சோதனை நடத்தியதில்,
ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; அவர்களுக்கு உடல் நிலையில்
எந்த பிரச்னையும் இல்லை. இது, அறிகுறி இல்லாத தொற்றாக தெரிய வந்துள்ளது.
பல்கலை வளாகத்தில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள்
எடுக்கப்பட்டுள்ளன. விடுதிகளில், ஒவ்வொரு மாணவருக்கும் தனி அறை
ஒதுக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் இருந்து, நேரடியாக அறைகளுக்கே உணவு
எடுத்துச் செல்லப்படுகிறது. மாணவர்கள் கூட்டமாக சேர்வதற்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.எனவே, மாணவர்களும், பெற்றோரும் எவ்வித அச்சமும் கொள்ள
வேண்டாம். சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகளை
கடைப்பிடித்தால் போதும். இவ்வாறு, இனியன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE