புதுடில்லி:பாலினம், மதம், இன, ஜாதி பேதங்களை களைந்து, எந்தெந்த காரணங்களுக்காக விவாகரத்து கோரலாம் என்பதற்கு, பொதுவான வழிமுறைகளை உருவாக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து பதிலளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பாகுபாடுபா.ஜ.,வைச் சேர்ந்த, அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்து உள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:
'எந்த நடவடிக்கைகளிலும், செயல்களிலும், பாகுபாடு இருக்கக் கூடாது' என, உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன. 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என, அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால், விவாகரத்து பெறுவதில், பல பாகுபாடுகள் உள்ளன. மதங்களுக்கு ஏற்ப, பல விவாகரத்து சட்டங்கள் உள்ளன. இவை, பெரும்பாலும், பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவேஉள்ளன.
அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஒவ்வொருவருக்கும் பல உரிமைகள் உள்ளன. அதனால், மதம், இனம், ஜாதி, பாலின பேதம் இல்லாமல், அனைவருக்கும் பொதுவான விவாகரத்து நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்,விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'அனைவருக்கும் பொதுவான விவாகரத்து வழிமுறைகளை உருவாக்க வேண்டுமானால்,பல்வேறு மதங்களுக்கான தனிநபர் சட்டங்களை நீக்க வேண்டும் என்கிறீர்களா. அப்படியென்றால், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.'முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்ததுபோல், அரசுதான், சட்டம் கொண்ட வர வேண்டும்' என, அமர்வு கூறியது.
பொதுவான நடைமுறை
இதற்கு, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டதாவது:தனிநபர் சட்டங்களை நீக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை அல்ல.முத்தலாக் முறை பாகுபாடு ஏற்படுத்துகிறது என்பதால்தான், அதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.நாட்டில் உள்ள அனைவரும், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவர்கள். அப்படி இருக்கையில், விவாகரத்துக்கும் பொதுவான நடைமுறையே இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மதத்திலும், விவாகரத்து செய்வதற்கான அடிப்படை காரணங்கள் வேறுபடுகின்றன. இதனால், பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதை தவிர்க்கவே, எந்தெந்த காரணங்களில் விவாகரத்து கோரலாம் என்ற வழிமுறையை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, அவர் வாதிட்டார்.அதையடுத்து, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக, அமர்வு அறிவித்தது. இது குறித்து, பதிலளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மற்றொரு வழக்கு
வழக்கறிஞர், அஸ்வினி உபாத்யாய் சார்பில் மற்றொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'விவாகரத்து வழக்குகளில், பராமரிப்பு செலவு மற்றும் ஜீவனாம்சம் வழங்குவதில், மதம், இனம், ஜாதி, பாலின பேதம் இல்லாமல் பொதுவான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, மனுவில் கூறப்பட்டுள்ளது.இதை விசாரணைக்கு ஏற்ற, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, இதற்கும் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE