''புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுவதற்கான அவசியம் குறித்து, நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுடன் நேரடியாக விவாதிக்க தயார்,'' என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரான, பா.ஜ.,வை சேர்ந்த ஹர்தீப் சிங் பூரி சவால் விடுத்துஉள்ளார்.
டில்லியில், 971 கோடி ரூபாய் செலவில், புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுவதற்கான, அடிக்கல் நாட்டு விழா, கடந்த, 10ம் தேதி நடந்தது. இந்த கட்டடம் கட்டுவதை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
100 ஆண்டுகள் பழமை
இதற்கிடையே, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், 'கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து, பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், 1,000 கோடி ரூபாய் செலவில், பார்லிமென்ட் கட்டுவது யாருக்காக; பதில் சொல்லுங்கள் பிரதமரே' என, விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் தேவை குறித்து, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:இப்போதுள்ள பார்லிமென்ட் கட்டடம், 100 ஆண்டுகள் பழமையானது.கடந்த, 1985ல், ராஜிவ் பிரதமராக இருந்த போது, சிந்தாமனி பானிக்கிரஹி தலைமையிலான கமிட்டி, பார்லி., கட்டடம் பற்றிய ஒரு அறிக்கையை, மத்திய அரசிடம் சமர்பித்தது.
அதில், 'பார்லிமென்ட் கட்டடத்தில் பல இடங்கள் பழுதாக உள்ளன. அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. ஆனால், ராஜிவ் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அறிக்கையை கிடப்பில் போட்டார். கடந்த, 1993ல், பார்லி.,யில், கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த போது, உள்ளே மழை நீர் கொட்டியது. 2000ம் ஆண்டில், கட்டடத்தின் கூரை ஆங்காங்கே இடிந்து விழுந்தது.
கடந்த, 2009 - 14 வரை, லோக்சபா சபாநாயகராக இருந்த மீரா குமார், புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்ட வேண்டிய அவசியம் பற்றி, அரசுக்கு கடிதம் எழுதினார்.இதன்பின், 2012ல், பார்லி., கட்டடத்தை ஆய்வு செய்த, ரூர்கி ஐ.ஐ.டி.,யின் பூகம்ப ஆய்வு குழு, 'பார்லி., கட்டடம் பாதுகாப்பாக இல்லை' என, தெரிவித்தது.கடந்த, 2015ல், புதிய பார்லி., கட்டடத்தின் அவசியம் பற்றி, அப்போதைய லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், அரசுக்கு கடிதம் எழுதினார்.கடந்த ஆண்டு, லோக்சபாவில் புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் அவசியம் பற்றி, சபாநாயகர் ஓம் பிர்லா தீர்மானம் கொண்டு வந்தார்.
அவசியம்
பார்லி., கட்டடத்தின் ஆயுள் முடிந்து விட்டதாலும், கட்டத்தின் கூரை பகுதிகள் இடிந்து விழுவதாலும், புதிய கட்டடம் கட்ட வேண்டிய அவசியம் பற்றி, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடுவும், தீர்மானம் கொண்டு வந்தார்.இதையடுத்து தான், புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்ட, மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த காரணங்கள் எதையும் தெரிந்து கொள்ளாமல், கமல்ஹாசன், பார்லி.,க்கு புதிய கட்டடம் தேவையா என கேட்டுள்ளது, அவரது அறியாமையைத் தான் காட்டுகிறது.புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்ட வேண்டிய அவசியம் பற்றி, கமல்ஹாசனுடன் நேரடியாக விவாதிக்க நான் தயார். அது, 'டிவி' சேனல்களாக இருந்தாலும் சரி, அல்லது பொது கூட்டமாக இருந்தாலும் சரி, அதில் விவாதிக்க தயாராக இருக்கிறேன். ஆங்கிலத்திலோ அல்லது எனக்கு தெரிந்த கொச்சை தமிழிலோ விவாதிக்க தயார். இடம், தேதி, நேரம் ஆகியவற்றை, கமல்ஹாச னே முடிவு செய்யட்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE