கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், கடந்த மாதம் பதவி விலகிய திரிணமுல் காங்., அமைச்சர் சுவேந்து அதிகாரி, சட்டசபை உறுப்பினர் பதவியையும், ராஜினாமா செய்தார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 294 இடங்கள் இருக்கும் மாநில சட்டசபைக்கு, வரும், ஏப்ரல் - மே மாதங்களில், பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக, ஆளும் திரிணமுல் காங்., கட்சிக்குள் சலசலப்பு நிலவி வருகிறது. கட்சியின் தலைமைக்கு எதிராக, அமைச்சர்கள் உட்பட பலரும் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி, கடந்த மாதம், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.இது, மம்தா பானர்ஜி அரசுக்கு, பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அவரை சமரசம் செய்ய நடந்த பேச்சுவார்த்தைகள், தோல்வியில் முடிந்தன.இந்நிலையில், சுவேந்து அதிகாரி, எம்.எல்.ஏ., பதவியையும், ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து, சபாநாயகருக்கு அவர் எழுதிய கடிதத்தில், 'மேற்கு வங்க மாநில சட்டசபை உறுப்பினர் பதவியை, நான் ராஜினாமா செய்கிறேன்.'இதை உடனடியாக ஏற்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்' என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கத்திற்கு வர உள்ளார். அப்போது, அவரை சந்தித்து, பா.ஜ., கட்சியில் சுவேந்து அதிகாரி இணைய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.அமித் ஷா வருகைக்கு முன், சுவேந்து அதிகாரி, டில்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE