உடுமலை : புலிகள் காப்பக வனத்தில், வனச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை வனத்துறையினர் துவக்கியுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 447 சதுர கி.மீ., வனப்பரப்பு உள்ளது. இரு சரகங்களும், 19 வனச்சுற்றுகளாக பிரிக்கப்பட்டு, வனத்துறையினரால் கண்காணிக்கப்படுகிறது.இந்த வனத்தில், அரிய வகை தாவர உண்ணிகள் அதிகளவு உள்ளன. இயல்பான வனச்சங்கிலி சுழற்சியில், தாவரங்களும், தாவர உண்ணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில், அரிய வகை தாவரங்களின் வளர்ச்சியை முடக்கும், களைச்செடிகள் பல்வேறு காரணங்களால், வனப்பகுதியில், வேகமாக பரவி வருகிறது.குறிப்பாக, சீமைகருவேல மற்றும் 'லெண்டானா' எனப்படும் உண்ணி செடி தாவரங்கள் இரு வனச்சரகங்களிலும் அதிகரித்து வருகிறது.உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களின் மையப்பகுதியில் மூணாறு ரோடு செல்கிறது. இந்த ரோட்டோரத்தில், பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. தண்ணீர் தேவைக்காக இடம் பெயரும், யானை மற்றும் மான்கள், அம்மரத்தில் இருந்து விழும் விதைகளை உண்கின்றன.இவ்வாறு, வனத்தின் அனைத்து பகுதிக்கும் இம்மரங்கள் பரவுகின்றன. இதனால், தாவர உண்ணிகளுக்கு, உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, மூணாறு ரோட்டில், யானைகள் வலம் வரும் பாதையில், அதிகளவு வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை வனத்துறையினர் துவக்கியுள்ளனர்.
இரு வனச்சரகத்துக்குட்பட்ட ரோட்டின் இருபுறங்களிலும், மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் விதைகள் பரவல் குறித்து தொடர்ந்து கண்காணித்து, அவற்றை அகற்றினால் மட்டுமே பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். எனவே, வனப்பகுதி முழுவதும், வனச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், களைச்செடிகளை முழுமையாக அகற்ற வனத்துறை நடவடிக்கையை இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE