உடுமலை : உடுமலை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, மருள்பட்டி செல்லும் ரோட்டில், ரயில்வே கீழ்மட்ட சுரங்கப்பாலம் உள்ளது. இந்த பாலத்தில், மழைக்காலத்தில், பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்குவதும், அவ்வழியாக போக்குவரத்து தடைபடுவதும் தொடர்கதையாக உள்ளது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, ரயில்வே நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.சமீபத்தில், பெய்த வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, பாலத்தில், தண்ணீர் வெளியேற முடியாமல், பல அடி உயரத்துக்கு தேங்கியுள்ளது. இந்நிலையில், அப்பாலத்தில், தேங்கியுள்ள தண்ணீரின் ஆழம் தெரியாமல், வெளியூரைச்சேர்ந்த நபர், அவ்வழியாக காரில் செல்ல முயன்றுள்ளார்.
ஆனால், தண்ணீரில், கார் மூழ்க துவங்கியதும், காரிலிருந்தவர்கள் வெளியேறினர்; சிறிது நேரத்தில், கார், தண்ணீரில் மிதக்க துவங்கியது. அப்பகுதியை சேர்ந்த மக்கள், கயிறு கட்டி, போராடி, காரை மேடான பகுதிக்கு இழுத்து மீட்டனர்.இச்சம்பவத்தால், அப்பகுதியில், பரபரப்பு ஏற்பட்டது. சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீரை உடனடியாக அகற்றி, நிரந்தர தீர்வு ஏற்படுத்தாவிட்டால், போராட்டத்தில், ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE