வாஷிங்டன்:கடந்த ஜூன் மாதம், இந்தியாவின் லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, அமெரிக்க பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் மற்றும் செனட் சபையில், என்.டி.ஏ.ஏ., எனப்படும் தேசிய ராணுவ அங்கீகார சட்டம் நிறைவேற்றப்பட்டது.இதில், இந்தியாவின் லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமும், இடம் பெற்றிருந்தது.இந்திய வம்சாவளியை சேர்ந்த, எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தியின் வலியுறுத்தலின் பேரில், இத்தீர்மானம், என்.டி.ஏ.ஏ.,வில் சேர்க்கப்பட்டது.
இத்தீர்மானத்துக்கு, அமெரிக்காவின் இரு சபைகளிலும், கட்சி வேறுபாடின்றி எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்தனர். இது பற்றி ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:இத்தீர்மானம், என்.டி.ஏ.ஏ.,வில் சேர்க்கப்பட்டது மூலம், இந்தியாவுக்கு எதிரான எந்த அத்துமீறலையும் எற்றுக் கொள்ள முடியாது என்பதை, அமெரிக்கா, சீனாவுக்கு தெளிவாக தெரிவித்துள்ளது.
சீனாவுடனான எல்லை பிரச்னைக்கு, பேச்சு மூலம் தீர்வு காணும் இந்தியாவின் முயற்சிக்கு, அமெரிக்கா துணை நிற்கும்.அதோடு, இதே பிரச்னைக்கு, பேச்சு மூலம் சுமுக தீர்வு கண்டு, எல்லையில், கடந்த ஏப்ரல் மாதம் இருந்த நிலையை கொண்டு வர, சீனாவிடம் இந்த தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE