உடுமலை : உடுமலை அருகே, பாசனத்துக்கும், நிலத்தடி நீருக்கும் ஆதாரமான குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குடியிருப்புகளின் கழிவு நீர் நேரடியாக கலப்பதை நிறுத்த, தொலைநோக்கு திட்டங்களை பொதுப்பணித்துறை வாயிலாக அரசு நிறைவேற்ற வேண்டும்.
உடுமலை அருகே தளியிலிருந்து அடுக்குத்தொடராக, ஏழு குள பாசன திட்ட குளங்கள் அமைந்துள்ளன. திருமூர்த்தி அணையிலிருந்து அரசாணை அடிப்படையில், இக்குளங்களுக்கு தளி வாய்க்கால் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இக்குளங்களால், 2,500 ஏக்கர் வரை நிலங்கள் நேரடி பாசனமும், ஆயிரக்கணக்கான ஏக்கருக்கு நிலத்தடி நீருக்கு ஆதாரமாக உள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றணும்
ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட குளங்களின் நீர்த்தேக்க பரப்பு மற்றும் வரத்து ஓடைகளில், நிரந்தர மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அனைத்து குளங்களிலும், பொதுப்பணித்துறை சார்பில், அளவீடு செய்யப்பட்டு, எல்லைக்கற்கள் நடப்பட்டன; ஆக்கிரமிப்பு அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.ஆனால், தொடர் கண்காணிப்பு இல்லாததால், குளங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.
வரத்து ஓடைகளின் கரையை சேதப்படுத்தி, ஆக்கிரமிப்பதால், குளங்களுக்கு, தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை இணைந்து குளங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கழிவு நீர் கலப்பு
உடுமலை அருகே பள்ளபாளையத்தில், 74.84 ஏக்கர் பரப்பில் செங்குளம் உள்ளது. குளத்துக்கு மழை நீர் வரும் வடிகாலில், கிராமத்தின் கழிவு நீர் கலக்கிறது. மழைக்காலத்திலும், அணையிலிருந்து தண்ணீர் வரும் போதும், கழிவு நீர் கலப்பதால், குளத்து நீர், நிறம் மாறி, துர்நாற்றம் வீசும் நிலைக்கு தள்ளப்படுகிறது.இதனால், நீர் மாசு, களைச்செடிகள் ஆதிக்கம் உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது. இதே போல், தினைக்குளம், ஒட்டுக்குளத்திலும், கழிவு நீர் கலப்பு, கட்டுமான கழிவுகளை கொட்டும் பிரச்னை அதிகரித்துள்ளது.
பொதுப்பணித்துறை சார்பில், தடுப்பு ஏற்படுத்துதல் உட்பட பணிகளை செய்தாலும், தொடர்ச்சியாக கண்காணிப்பு இல்லாததால், பிரச்னைகள் குறைவதில்லை.நீராதாரங்களை பாதுகாப்பதில், அரசுத்துறையினர் முழுமையாக அக்கறை காட்டி, ஏழு குளங்களை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அனைத்து குளங்களிலும், ஆகாயத்தாமரையின் பரவல் கூடுதலாகியுள்ளது.
நீர் தேக்கத்தில், அதிக பாதிப்புகளை உருவாக்கும் இவற்றை, தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பொதுப்பணித்துறையினர் அகற்றவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE