வாஷிங்டன்:ஐ.எஸ்.எஸ்.. எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு, ஐரோப்பிய விண்வெளி அமைப்புடன் இணைந்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்ப உள்ள விண்கலத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரி, கமாண்டராக பயணிக்க உள்ளார்.
கடந்த, 1969ல், நிலவில் வீரர்களை இறக்கி, அமெரிக்கா முதல் சாதனையை நிகழ்த்தியது. தற்போது, இரண்டாவது முறையாக, இந்நாடு, நிலவுக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பெருமை
இதற்கு, 'ஆர்டெமிஸ்' என, பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக, இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரி, 43, என்பவர் உட்பட, ஒன்பது ஆண் மற்றும் ஒன்பது பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், நாசாவும், ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் இணைந்து, ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு, அடுத்த ஆண்டு விண்கலத்தை அனுப்ப உள்ளது.
'ஸ்பேஸ் எக்ஸ்க்ரு டிராகன்'என்ற இந்த விண்கலத்தில் பயணிக்க உள்ள மூன்று பேர் குழுவுக்கு, ராஜா சாரி தலைவராக இருப்பார்.இது பற்றி, நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சர்வதேச விண்வெளி மையத்துக்கு அடுத்த ஆண்டு அனுப்ப உள்ள விண்கலத்தில், கமாண்டராக நாசாவை சேர்ந்த ராஜா சாரியும், பைலட்டாக, நாசாவின் டாம் மார்ஷ்பர்னும் பயணிப்பர்.'ஐரோப்பிய விண்வெளி அமைப்பை சேர்ந்த மதியாஸ் மவுரர், வல்லுனராக பயணிப்பார்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், ராஜா சாரி வெளியிட்ட பதிவில், 'சர்வதேச விண்வெளி மையத்துக்கு, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பயணிக்க, மார்ஷ்பர்ன், மவுரர் ஆகியோருடன் பயிற்சியில் ஈடுபடப் போவது, பெருமையாக உள்ளது' என, தெரிவித்துள்ளார்.ராஜா சாரியின் தந்தை சீனிவாஸ் சாரி, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதை சேர்ந்தவர். இன்ஜினியரான இவர், வேலைக்காக அமெரிக்காவுக்கு சென்றவர், அங்கேயே குடியேறிவிட்டார்.
விமானி
அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்த ராஜா சாரி, விண்வெளி துறையில் பொறியியல் பட்டம், ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளித் துறையில் முதுகலை பட்டமும் பெற்றார்.பின், மேரிலேண்டில் உள்ள, அமெரிக்க கடற்படை பைலட் கல்லுாரியில் பயின்று, விமானியாக தகுதி பெற்றார். கடந்த, 2017-ல் விண்வெளி வீரராக, நாசாவில் இணைந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE