மடத்துக்குளம் : அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையாக உள்ள, 5.84 கோடி ரூபாய் உள்ளது. இத்தொகையை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஏப்., துவங்கி செப்., மாதம் வரை கரும்பு அரவை பருவமாகும். உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், பழநி தாலுகா பகுதியில் உள்ள விவசாயிகளி-டம், ஒப்பந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு கரும்பு கொள்முதல் நடக்கிறது. விவசாயிகள் கரும்பு பதிவு செய்ய குமரலிங்கம், கணியூர், நெய்க்காரப்பட்டி, பழநி மற்றும் ஆலைப்பகுதியில் கோட்ட அலுவலகங்கள் உள்ளன. கடந்த, 2019 -- 20ம் ஆண்டு அரவை பருவத்தில், 1,206 விவசாயிகளிடமிருந்து, 67,303 டன் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது.
இதில், கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி வரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு 38,243 டன்னுக்குரிய கிரைய தொகை வழங்கப்பட்டுள்ளது.ஜூன் 8ம் ஆம் தேதி தொடங்கி, ஜூலை 8ம் தேதி வரை கரும்பு வழங்கிய, 512 விவசாயிகளுக்கு, 29 ஆயிரத்து 60 டன் கரும்புக்கான கிரையத்தொகை, 5 கோடியே 84 லட்சம் ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'கரும்பு வழங்கி ஐந்து மாதங்கள் கடந்தும் கிரையத்தொகை வழங்கப்படவில்லை. இதனால் வழக்கமாக ஆலைக்கு கரும்பு வழங்கும் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் அவர்கள் ஆலைக்கு கரும்பு வழங்க தயங்குகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வாக, நிலுவையான தொகையை உடனடியாக வழங்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE