கரும்பு விவசாயிகளின், 3,500 கோடி ரூபாய் நிலுவையை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
டில்லியில்,பிரதமர் தலைமையில், மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது.இது குறித்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறும்போது, ''கரும்பு விவசாயிகளுக்கு, 3,500 கோடி ரூபாய் நிலுவையை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த, அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது,'' என்றார்.
இதன் மூலம், கரும்பு விவசாயிகள், ஐந்து கோடி பேரும், அவர்களை சார்ந்துள்ளோரும் பயன் அடைவர்.அத்துடன், கரும்பு ஆலை மற்றும் துணைப் பிரிவுகளில் பணியாற்றும், ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களும் பயன் பெறுவர் என, அமைச்சர் தெரிவித்தார்.இது, விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள, கரும்பு விவசாயிகளுக்கு இனிக்கும் செய்தியாக இருக்கும்.
அடுத்து, அமைச்சரவை குழு கூட்டத்தில், 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அகண்ட அலைவரிசை உரிமத்திற்கான ஏலத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இது குறித்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், ''அமைச்சரவை குழு, அடுத்த கட்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கும், அதற்கான விதிமுறைகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
''அதன்படி, 2021 ஜன., இறுதியில், 700 - 2,500 மெகாஹெர்ட்ஸ் வரை, ஏழு பிரிவுகளில் ஸ்பெக்ட்ரம் ஏலம் துவங்கும்,'' என்றார்.ஒட்டுமொத்தமாக, 2,251 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஏலம் வாயிலாக, மூன்று லட்சத்து, 92 ஆயிரத்து, 330 கோடி ரூபாய் திரட்டப்பட உள்ளது. தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கு, அவை கொள்முதல் செய்யும் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை தெரிவிக்க, தேசிய பாதுகாப்பு குழு அமைக்கப்பட உள்ளது. இதற்கு, அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
''தேசிய பாதுகாப்பு குழு, எந்த நிறுவனங்களிடம் சாதனங்களை வாங்கலாம் அல்லது வாங்கக் கூடாது என்பதையும், சாதனங்களின் தரம் பற்றிய தகவலையும் தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கு தெரிவிக்கும்,'' என, ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE