திருப்பூர் : கொரோனா பாதிப்பு சரிந்து கொண்டிருப்பதால், திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், மார்கழி உற்சவம் உற்சாகத்துடன் துவங்கியுள்ளது.
மார்கழி மாதத்தில், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், அதிகாலையில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மார்கழி மாத துவக்கமான நேற்று, திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள கோவில்கள், பல்லடம், அவிநாசி, திருமுருகன்பூண்டி, பொங்கலுார் சுற்றுப்பகுதிகளில் உள்ள, அனைத்து கோவில்களிலும் மார்கழி மாத வழிபாடு துவங்கியது.
அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம் சார்பில், 67 ம் ஆண்டு வழிபாடு துவங்கியுள்ளது. திருப்பூர் நகரில், கடந்த, 66 ஆண்டுகளாக, திருமுறை தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் கலந்து ஓதும் புண்ணிய பயணம் சென்று கொண்டிருக்கிறது.மார்கழி மாத துவக்கமான நேற்று, சிறப்பு பாராயண பஜனை வழிபாடு துவங்கியது. குலாலர் விநாயகர் கோவிலில், திருப்பள்ளி எழுச்சி, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் திருவெம்பாவை, வீரராகவ பெருமாள் கோவிலில், திருப்பாவை வழிபாடும், பஜனையும் நடந்தது. கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பஜனையும் நடந்தது.
கோவில்களுக்கு, இன்னிசை இசைத்து, பஜனை பாடியபடி ஊர்வலமாக சென்று, பாராயணம் செய்து வழிபட்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி, முககவசம் அணிந்தபடி சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE