புதுடில்லி:நாட்டின் பல்வேறு இடங்களில், பயங்கரவாத தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டிய, தமிழகத்தை சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதிக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியா உட்பட, உலகின் பல்வேறு நாடுகளிலும், பயங்கரவாத நடவடிக்கைகளில், ஐ.எஸ்., அமைப்பு ஈடுபட்டு வருகிறது.இதற்காக, பல்வேறு நாட்டு இளைஞர்களையும் மூளை சலவை செய்து, பயங்கரவாதிகளாக மாற்றி வருகிறது. தமிழகம், கேரளா உட்பட, நாட்டின் பல்வேறு மாநில இளைஞர்கள், வெளிநாடு சென்று பயிற்சி பெற்று, ஐ.எஸ்., அமைப்பில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், ஐ.எஸ்., அமைப்பின் உறுப்பினரான, தமிழகத்தை சேர்ந்த, முகமது நாசர் என்ற இளைஞரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், கடந்த, 2015ல், வட ஆப்பிரிக்க நாடான, சூடானில் கைது செய்தனர்.சூடானில் இருந்து நாடு கடத்தப்பட்ட அவரிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, இந்தியா உட்பட, பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களை, ஐ.எஸ்., அமைப்பில் இணைக்கும் பணியினை, நாசர் செய்து வந்தது தெரிந்தது.
மேலும், ஐ.எஸ்., உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலரது பெயர்கள் மற்றும் மொபைல் எண்களை, நாசர் தெரிவித்தார்.இவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில், பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து, பயங்கரவாதி நாசருக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, டில்லி நீதிமன்றம், உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE