கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நேற்று முதல் மீண்டும் மழை துவங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் (16ம் தேதி) 19 வரையில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
கடலுார் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்ய துவங்கி இடைவிடாது பெய்தது. நேற்று காலை 8:30 மணி வரையில் கடலுாரில் 47.4 மி.மீ., கலெக்டர் அலுவலகம் 39.2, வானமாதேவி 32, பண்ருட்டி 27, கொத்தவாச்சேரி 22, புவனகிரி 14, குப்பநத்தம் 13.6, பரங்கிப்பேட்டை 12.4, சேத்தியாத் தோப்பு 10, வடக்குத்து 9, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 9, அண்ணாமலைநகர் 7.8, சிதம்பரம் 6.2, ஸ்ரீமுஷ்ணம் 6.2, விருத்தாசலம் 5.1, காட்டுமன்னார்கோவில் 3.4, லால்பேட்டை 3.2, பெலாந்துறை 2.2, கீழ்செருவாய், மே மாத்துார் 2 என, மொத்தம் 287.70 மி.மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 11.51 மி.மீட்டர் மழை பதிவாகியது. இதில் கடலுாரில் அதிகபட்சமாக 47 மி.மீட்டர் மழை பெய்தது.கனமழையால் கடலுார் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர், தாழ்வான பகுதிகளில் தேங்கியது, தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 'நிவர்' மற்றும் 'புரெவி' புயல் காரணமாக பெய்த கனமழையின் போது குடியிருப்புகளை சூழ்ந்திருந்த மழை நீர் வடிவதற்குள், தற்போது பெய்த மழையில் மீண்டும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. நேற்று பெய்த தொடர் மழையால் மக்கள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தாழ்வான நகர் பகுதிகளில் நகராட்சி மூலம் மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE