மதுரை:'மூன்றாண்டில் படிக்க வேண்டிய, பி.ஏ., பட்டத்தை ஓராண்டில் படித்ததாக, மதுரை காமராஜ் பல்கலை பட்டம் வழங்கியது, மோசடிக்கு சமம். எப்படி எப்படியெல்லாம் தவறு செய்யலாம் என, இப்பல்கலையில் கற்றுக் கொள்ளலாம்.'நல்ல தலைவர் காமராஜ் பெயரில் உள்ள இப்பல்கலையின் பெயரை மாற்றி விடலாம்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி வெளியிட்டது.
மதுரை, ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர், 1990ல், பி.எஸ்சி., கணிதம், மூன்று ஆண்டு படிப்பில் சேர்ந்தார்.அது சிரமமாக இருந்ததால், முதல் இரு ஆண்டுகள் முடித்ததும், மூன்றாவது ஆண்டு மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில், பி.ஏ., வரலாறு சேர்ந்தார். அவருக்கு பல்கலை விலக்களித்து, பி.ஏ., வரலாறு மூன்று ஆண்டு பாடங்களுக்கும் தேர்வு எழுத அனுமதித்தது. பாபுவிற்கு, 1995ல், பி.ஏ., வரலாறு பட்டம் வழங்கப்பட்டது.
பின், பாரதியார் பல்கலையில், பி.எட்., பட்டம் பெற்றார்.ஆசிரியர் தேர்வு வாரியம், டி.ஆர்.பி., பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிட்டது.பாபு விண்ணப்பித்தார். 2014ல் சான்றிதழ் சரிபார்ப்பில் பாபு பங்கேற்றார்.அவருக்கு தகுதி இல்லை எனக் கூறி, டி.ஆர்.பி., நிராகரித்தது. அதை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பாபு மனு தாக்கல் செய்தார்.
அரசு தரப்பு, 'பாபு பி.ஏ., வரலாறு ஓராண்டு தான் படித்துள்ளார். பணி நியமனத்திற்கு தகுதிகளை பெற்றிருக்கவில்லை. இதனால், அவருக்கு பணி வழங்கவில்லை' என, தெரிவித்தது.தனி நீதிபதி, 'பணி வழங்க மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பணி வழங்க, டி.ஆர்.பி., பரிசீலிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, டி.ஆர்.பி., தலைவர் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு: மூன்றாண்டில் படிக்க வேண்டிய பி.ஏ., வரலாறை ஓராண்டில் படித்ததாக, மதுரை காமராஜ் பல்கலை பட்டம் வழங்கியது, மோசடிக்கு சமம்.எப்படி எப்படியெல்லாம் தவறு செய்யலாம் என்பதை, இப்பல்கலையில் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு, இது முன்னுதாரணம்.
நல்ல தலைவர் காமராஜ் பெயரில் உள்ள இப்பல்கலையின் பெயரை மாற்றி விடலாம்.இவ்வாறு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தனர். பல்கலை தொடர்பான இதர வழக்குகளுடன் சேர்த்து, நாளை விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE