கோவை : உக்கடம் பாலம் கட்டுமான பணியில், இரு துாண்களுக்கு இடையே ஓடுதளம் அமைப்பதற்கு குறுக்காக மின் கம்பம் இருக்கிறது. மின் புதை வடம் பதிப்பது தாமதமாக நடப்பதால், பாலம் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்கிறது. இதில், உக்கடம் சந்திப்பு முதல் கரும்புக்கடை வரை வேலை முடிக்கப்பட்டு, தற்காலிகமாக வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ் ஸ்டாண்ட் முன், துாண்கள் கட்டப்பட்டு உள்ளன. வாலாங்குளம் பை-பாஸ் சந்திப்பு மற்றும் பேரூர் பை-பாஸ் சந்திப்புகளில், மின் கம்பங்கள் குறுக்கிடுவதால், ஓடுதளம் அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது.
இப்பகுதியில் ஓடுதளம் அமைத்து, துாண்களுக்கு இடையே மையத்தடுப்பு கட்டினால் போதும். வாகனங்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் சுற்றிச் செல்ல வேண்டிய அவஸ்தை இருக்காது; போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படாது. ஆத்துப்பாலம் செல்ல வேண்டிய வாகனங்கள் நேராகச் செல்லலாம். ஆத்துப்பாலம் மற்றும் வாலாங்குளம் ரோட்டில் வருபவர்களும் பஸ் ஸ்டாண்ட்டுக்குள், பஸ் போக்குவரத்துக்கு இடையே, நுழைந்து செல்ல வேண்டிய அவலம் இருக்காது.இது தொடர்பாக, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நெடுஞ்சாலைத்துறை தரப்பில், பணம் கட்டி விட்டனர். எங்களது மேற்பார்வையில், அத்துறையினரே பணி மேற்கொள்வர். நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எப்போது சொல்கிறார்களோ, உடனடியாக மின் இணைப்பு துண்டித்து, கம்பத்தை அகற்றி, மாற்று ஏற்பாடு செய்து கொடுத்து விடுவோம்' என்றனர்.மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மின் புதை வடம் பதிக்கும் பணி, 2 கி.மீ., துாரத்துக்கு நடந்திருக்கிறது. பேரூர் பை-பாஸ் சந்திப்பில் உள்ள மின் கம்பத்தை, ஒரு வாரத்துக்குள் அகற்றி, ஓடுதளம் போடப்படும். வாலாங்குளம் பை-பாஸ் சந்திப்பில் உள்ள மின் கம்பத்தை அகற்ற, சற்று நாளாகும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE