கோவை : மக்கும் குப்பையை தனியாக சேகரிக்க, ஒரு கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட, 18 வாகனங்களின் இயக்கத்தை, அமைச்சர் வேலுமணி கொடியசைத்து, துவக்கி வைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு மாதமாக பயன்படுத்தாமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சி பகுதியில், நாளொன்றுக்கு, 850 டன் முதல், 1,000 டன் வரை குப்பை சேகரமாகிறது. அவற்றை வெள்ளலுார் கிடங்கிற்கு கொண்டு செல்லாமல், உருவாகும் இடத்திலேயே அழிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக, மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் பணி, படிப்படியாக ஒவ்வொரு வார்டாக செய்யப்படுகிறது.
இதற்கு வீதி வீதியாகச் சென்று, மக்கும் குப்பை மட்டும் தனியாக சேகரிக்க, பிரத்யேகமாக வாகனம் வாங்கப்படுகிறது. இதுவரை, 102 வாகனங்கள் தருவிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.ஒரு கோடி ரூபாய் செலவில், மேலும், 18 வாகனங்கள் வாங்கப்பட்டு, ஆர்.எஸ்.புரம் கலையரங்கு வளாகத்தில், ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இச்சூழலில், மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில், அவ்வாகனங்களின் பயன்பாட்டை அமைச்சர் துவக்கி வைப்பதாக கூறி, அனைத்து வாகனங்களும் நேற்று கொண்டு செல்லப்பட்டன. அதிகாரிகளும் காத்திருந்தனர். தவிர்க்க முடியாத காரணத்தால், அமைச்சரால் வர முடியாதென தகவல் வந்ததால், மறுதேதி குறிப்பிடாமல், நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மக்கும் குப்பை மட்டும் தனியாக சேகரிக்க, இவ்வாகனங்கள் பயன்படுத்தப்படும். அக்குப்பை உரம் தயாரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும். இதன் மூலம், 18 டன் குப்பை, வெள்ளலுார் கிடங்கிற்கு எடுத்துச் செல்வது தவிர்க்கப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE